வங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு!

0

மோடி தலைமையிலான பாஜக அரசு வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் தப்பியோடிய நீரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன்களை தள்ளுபடி செய்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட் கப்பட்ட கேள்வி மூலம் அம்பலமாகியுள்ளது.

பல தலைமுறைகளுக்கு சொத்து குவித்து வெளிநாடுகளில் பதுங்கிக்கொண்டு உல்லாசமாக பொழுதைக் கழிக்கும் இப்படிப்பட்ட மிக மோசமான குற்றவாளிகளுக்குத்தான் பாஜக அரசு கருணை காட்டியுள்ளது.

சிறையில் இருக்கவேண்டிய இவர்கள் இன்று ஆட்சியாளர்களின் முழு ஆசியுடன் வெளிநாடுகளில் சுதந்திரமாக சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை நிச்சயம் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம், வராக்கடனைக் கட்டாயம் வசூலிப்போம் என்று பாஜக அரசு கூறி பல ஆண்டுகள் கடந்துவிட்டது. சட்டப்படி அவர்களை வெளிநாடுகளிலிருந்து மீட்பதற்கும் ஆக்கப்பூர்வான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

கடனை ஏன் தள்ளுபடி செய்தீர்கள் என்று கேட்டால், கடனை தள்ளுபடி செய்யவில்லை, அந்த தொகையை வங்கியின் வரவு செலவில் காட்டாமல் தனியாக ஒதுக்கி வைத்திருப்பதாக விளக்கம் அளிக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதுவரை இப்படி தள்ளி வைக்கப்பட்ட எந்த கடன் தொகையையாவது அரசு வசூலித்தது உண்டா? அல்லது அவர்களின் சொத்துக்களையாவது பறிமுதல் செய்ததுண்டா?

ஊரடங்கு எத்தனை நாள் தொடருமோ? மீண்டும் வேலை கிடைக்குமா? சம்பளம் கிடைக்குமா? என தொழிலாளிகளும் ஏழை எளிய மக்களும் பெரும் கவலையில் உள்ளனர்.

மூடப்பட்ட தொழில் நிறுவனங்கள் எப்படி இயல்பு நிலைக்கு திரும்பபோகிறது என்பது தெரியவில்லை? இந்த நெருக்கடியான காலத்தில் மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கை நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகமாகும்.

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை, எளிய மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்கு என்று கேட்டால் கோரிக்கை வலுத்து வரும் நிலையில் கார்ப்பரேட்டுகள் மீது வரிபோடுவதற்கு பதிலாக அரசு ஊழியர்களின் சம்பளத்தல் கை வைத்துள்ளனர்.

பொதுத்துறை வங்கிகளைச் சூறையாடிய கொள்ளையர்களைக் காப்பாற்றியிருக்கும் மோடி அரசின் செயல் கடுமையான கண்டனத்திற்கு உரியதாகும்.

Comments are closed.