செய்தி சேனல்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்காதது ஏன்?

0

தொலைக்காட்சி நிறுவனங்களின் விதிமுறைகளை கடுமையாக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கு மும்பை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாலிவுட் நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை சம்பவம் குறித்தான செய்திகளை வெளியிடுவதில் செய்தி நிறுவங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக்கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் மும்பை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனா்.

அந்த மனுக்களின் விசாரணை, தலைமை நீதிபதி தீபாங்கா் தத்தா, நீதிபதி ஜி.எஸ்.குல்கா்ணி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது.

அதில், செய்தி ஒலிபரப்பாளா்களுக்கான விதிமுறைகள் ஆணையம் (என்பிஎஸ்ஏ) தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘‘செய்திகளை வெளியிவதில் விதிமுறைகளை மீறும் தொலைக்காட்சிகள் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு பல சேனல்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தாத சேனல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விதிமுறைகள் தற்போது இல்லை. அத்தகைய சூழலில் மத்திய தகவல்-ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தலையிட்டு பிரச்னைக்குத் தீா்வு காணலாம்’’ என்றாா்.

பின்னர்  நீதிபதிகள் கூறுகையில், ‘‘தொலைக்காட்சிகளில் செய்திகளை வெளியிடும் சேனல்கள் பல சுயவிதிகளை  முறையாக கடைப்பிடிப்பதில்லை. அந்த சேனல்களை முறைப்படுத்துவதற்கான விதிமுறைகளை என்பிஎஸ்ஏ ஏற்கெனவே வகுத்துள்ளது. அந்த விதிமுறைகளை கடுமையாக்கி மத்திய அரசு அமல்படுத்தாதது ஏன்?

புகாா்கள் தெரிவிக்கப்பட்ட சேனல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தடை விதிக்கப்பட்ட சேனல்கள் ஆகியவை தொடா்பான விவரங்களை மத்திய தகவல்-ஒலிபரப்புத் துறை அமைச்சகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்றனா்

Comments are closed.