கோவையில் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக குடியுரிமை திருத்த சட்ட – சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆற்றுப்பாலம் பகுதியில் ‘கோவை ஷாஹின் பாக்’ 20 நாட்களுக்கு மேலாக தொடர்ந்தது. இதனை சீர்குலைக்கும் வகையில் மார்ச் 2ம் தேதி காந்திபுரம் பகுதியில் சிஏஏ ஆதரவு பேராட்டத்தை பாஜக, இந்து முன்னணி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய இந்துத்துவ அமைப்புகள் தொடங்கினர்.
அன்று மாலை அப்பகுதிக்கு வாடகைக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர் சாகுல் ஹமீது என்பவர் இந்துத்துவ அமைப்பினரால் கடுமையாக தாக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக இருதரப்பை சேர்ந்தவர்கள் மாறி, மாறி தாக்கப்பட்டனர். தொடர்ந்து இந்துத்துவ தலைவர்களின் வெறுப்பு பேச்சு செய்தி ஊடகங்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக வேகமாக பரவ தொடங்கியது. அன்றிலிருந்து பதற்றமான சூழல் உருவாக்கி விட்டது.
இந்த நிலையில் பயங்கரவாதிகள், ஆயுதங்களுடன் கோவையில் ஊடுருவி உள்ளதாக காவல்துறைக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தம் 2400 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் காவலர்கள் நஞ்சுண்டாபுரம் சோதனை சாவடியில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற காரை சோதனை செய்தனர். காருக்குள் கத்தி, வாள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. மேலும் காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த பழனிகுமார், சுரேஷ்குமார், கார்த்திக், உசிலம்பட்டியை சேர்ந்த வீர சுபாஷ், திருமங்கலத்தை சேர்ந்த மனோபாலா, தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்று தெரியவந்தது.
கைதான 6 பேரும் எதற்காக காரில் ஆயுதங்களுடன் வந்தனர்? பயங்கரவாதிகளா? கோவையில் அசம்பாவிதம் நடத்த வந்தவர்காளா? என்று கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.