PM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு

0

கொரோனாவால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்காகச் செலவிடும் அவசரகால நிதி என்று கூறி பி.எம்.கேர்ஸ் நிதியம் தொடங்கப்பட்டது. இதன் தலைவராக நரேந்திர மோடியும், உறுப்பினர்களாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரும் உள்ளனர்.

பொதுமக்கள், அரசு ஊழியர்கள், இராணுவத்தினர், நிதித்துறை, சினிமா துறையில் உள்ளவர்கள், பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் என்று பல மாநிலங்களிலிருந்தும் நிதி வழங்கி வருகிறார்கள். இதுவரையிலும் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் பி.எம்.கேர்ஸ் நிதியத்தில் நிதி சேர்ந்துள்ளது.

பி.எம்.கேர்ஸ் நிதியை பொது பயன்பாட்டுக்கு வழங்காதது ஏன் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரதமர் அலுவலகம், பி.எம்.கேர்ஸ் நிதியம் பொது நிறுவனம் அல்ல. அதற்கு வரும் நிதி மற்றும் செலவிடப்படும் நிதியை வெளியில் தெரிவிக்க முடியாது என திட்டவட்டமாக மோடி அரசு மறுத்திருந்தது.

இந்நிலையில் பி.எம்.கேர்ஸ் நிதியத்தை பொது நிறுவனமாக அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தி டெல்லி உயர்நீதிமன்றத்திலும் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது

தற்போது பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து செலவிடப்பட்ட, ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பான விவரங்களை மத்திய பாஜக அரசு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

50 ஆயிரம் வென்டிலேட்டர்களை இந்தியாவில் தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றில் 3 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1,340 வென்டிலேட்டர்கள் மற்ற மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் 14 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரித்து முடிக்கப்படும். இவற்றில் 275 மகாராஷ்டிராவுக்கும், 275 டெல்லிக்கும், 175 குஜராத்திற்கும், 100 பீகாருக்கும், 90 கர்நாடகாவுக்கும், 75 ராஜஸ்தானுக்கும் வழங்கப்படும். 

மொத்தம் தயாரிக்கப்படவுள்ள 50 ஆயிரம் வென்டிலேட்டர்களில் 30 ஆயிரம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட்டால் அளிக்கப்படும்.

மற்ற 20 ஆயிரம் வென்டிலேட்டர்களை அக்வா ஹெல்த்கேர், ஏ.எம்.டி.ஸெட். பேசிக், ஏ.எம்.டி.எஸ். ஹை என்ட், அலைடு மெடிக்கல் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வழங்கும். 

முன்னதாக வெளிமாநில தொழிலாளர்கள் நலனுக்காக ரூ. 1,000 கோடி பி.எம். கேர்ஸில் இருந்து ஒதுக்கப்பட்டது. இந்த தொகையில் மகாராஷ்டிரா ரூ. 181 கோடி, உத்தரப்பிரதேசம் ரூ. 103 கோடி, தமிழ்நாடு 83 கோடி, குஜராத் 66 கோடி, டெல்லி ரூ. 55 கோடி, மேற்கு வங்கம் ரூ. 53 கோடி, பீகார் ரூ. 51 கோடி, மத்திய பிரதேசம் ரூ. 50 கோடி, ராஜஸ்தான் ரூ. 50 கோடி, கர்நாடகா ரூ. 34 கோடியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பி.எம்.கேர்ஸ் நிதி பற்றி பொதுவெளியில் தெரிவிக்க முடியாது என்றும் அது தனியார் வசம் உள்ளது என கூறிவிட்டு தற்போது அதே நிதி மக்களுக்கு செலவிடப்பட்டுள்ளதாக பாஜக அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு அறிவிப்பிலும் மக்களை குழப்பத்தில் மூழ்கடிக்க வேண்டும் என்பதற்காகவே பாஜக இவ்வாறு அரசு மாறி மாறி பேசி வருகிறது.

Comments are closed.