கொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

0

கொரோனா வைரஸ் பரிசோதனை கட்டணம் நாடு முழுவதும் ஒரே முறையில் இருக்க வேண்டும் என்று மத்திய பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோயாளிகளின் நலன் தொடர்பாக உச்ச நீதிமன்றம் முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கவுல், எம்.ஆர்.ஷா அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறும்போது, “சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை கட்டணம் ரூ.2,200 ஆகவும் சில மாநிலங்களில் ரூ.4,500 ஆகவும் உள்ளது. எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் நிர்ணயம் செய்ய முடியாது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டியது மத்திய அரசு தான்” என்று தெரிவித்தனர்.

மத்திய பாஜக அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா கூறும்போது, “பரிசோதனை கட்டணத்தை மாநில அரசுகள் நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுளாது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரிசோதனை கட்டணம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசே கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மும்பை மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் தனியார் ஆய்வகங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அண்மையில் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அதாவது, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால் நோயாளிகளிடம் பரிசோதனை அறிக்கையை அளிக்கக்கூடாது.

மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று இல்லையென்றால், சம்பந்தப்பட்டவர்களிடம் பரிசோதனை அறிக்கையை வழங்கலாம்” என்று உத்தரவிட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து நீதிபதிகள் கூறும்போது, “பரிசோதனை முடிவுகளை நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் மும்பை தனியார் ஆய்வகங்கள் நேரடியாக வழங்கலாம். இதற்கு மகாராஷ்டிர அரசு தடை விதிக்கக்கூடாது” என்று உத்தரவிட்டனர்.

Comments are closed.