கோவையில் இஸ்லாமியர்களாக மாறிய 430 தலித் மக்கள்

0

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் துணிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியம் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து தலித் குடும்பங்களை சேர்ந்த 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் துணிக்கடை உரிமையாளர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பல தரப்பினர் வலியுறுத்தினர்.

ஆனால் சிவசுப்பிரமணியம் மீது சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்திய பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்து மதத்தில்  தலித் மக்களுக்கு உரிய சுயமரியாதை கிடைக்காததால், 3000 தாழ்த்தப்பட்ட மக்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறப்போவதாக அறிவித்திருந்தனர்.

அதன் ஒரு பகுதியாக தற்போது வரை 430 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறி இருப்பதாகவும், சட்டப்பூர்வமாக தாங்கள் இஸ்லாம் மதத்தினை தழுவி இருப்பதாக தெரிவித்தனர்.

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 உயிரிழந்த விவகாரத்திற்கு பின்னர் இஸ்லாத்திற்கு மாறவேண்டும் என்ற எண்ணம் தலித் மக்களிடம் அதிகரித்து இருப்பதை உணர முடிவதாகவும், தலித் சமூகத்தை சேர்ந்த 40 குடும்பங்கள் மொத்தமாகவும், மற்ற வீடுகளில் இளைஞர்கள் மட்டும் என 430 பேர் இஸ்லாம் மதத்தினை தழுவி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்து மதத்தில் இருந்து விடுதலை பெற்றால் மட்டுமே சாதி ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமையை ஒழிக்க முடியும் என்பதால் இஸ்லாத்தை தழுவி இருக்கின்றோம் என தெரிவிக்கும் அவர்கள், இஸ்லாம் மட்டுமே தங்களை வேறுபாடுகள் இல்லாமல் சக மனிதராக தங்களை அரவணைத்து கொள்கின்றது எனவும் இஸ்லாம் மதத்தினை தழுவியவர்கள் தெரிவிக்கின்றனர்.

சம உரிமையும், சுயமரியாதையும் இஸ்லாம் மதம் கொடுப்பதால், தலித் சமூக மக்கள் தொடர்ந்து இஸ்லாம் மதத்தினை தழுவுவது தொடரும் எனவும் இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply