வாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்

0

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் 53 நபர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். கடந்த பிப்ரவரி 23, அன்று பா.ஜ.க.வின் கபில் மிஸ்ரா கலவரத்தை தூண்டும் விதத்தில் பேசிய பிறகு தான் இந்த வகுப்பு வாத வன்முறை நடந்தது. பிரபல இணைய தளமான Newslaundry டெல்லியின் வடக்கிழக்கு பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் இருந்து நிறைய பிணங்கள் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடுகிறது.

கடந்த பிப்ரவரி 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் டெல்லியின் ஜோஹ்ரிப்பூர் பாலத்தில் நடந்த கலவரத்தில் 9 நபர்கள் கொல்லப்பட்டதாக டெல்லி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை வாயிலாக நாம் அறிய முடிகிறது. கொல்லப்பட்ட 9 பேரில் 4 நபர்கள் பிப்ரவரி 26 இரவு 9 மணி முதல் 9.40க்கு இடைப்பட்ட நேரத்தில் கொல்லப்பட்டதாக டெல்லி போலீஸின் குற்றப்பத்திரிகை உறுதி செய்கிறது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் பேசும் போது, டெல்லி கலவரம் பிப்ரவரி 25 ஆம் தேதி அன்றே முடிவடைந்து விட்டதாக தெரிவித்தார்.
அமீர் கான் (30 வயது) மற்றும் அவருடைய சகோதரர் ஹாஷிம் அலி (19 வயது) கொல்லப்பட்ட வழக்கில் இந்து மதத்தை சேர்ந்த 11 நபர்களை டெல்லி காவல் துறை கைது செய்தது. மேலும் இவர்களுடைய வாட்ஸ் அப்பை (WhatsApp) ஆய்வு செய்தபோது கட்டார் ஹிந்து ஒற்றுமை (Kattar Hindu Ekta) என்ற குரூப்பை பிப்ரவரி 24 இரவில் தொடங்கி 125 நபர்களை சேர்த்தது தெரிய வந்தது.

இந்த வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிக்கப்பட்ட நோக்கமே இவர்கள் பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களை கொலை செய்வது, முஸ்லிம்களுடைய சொத்துகளை சூரையாடுவது மற்றும் மசூதிகள் மீது தாக்குதல் நடத்துவது என்று குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குருப்பில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் முழு அளவில் மேற்கொள்ளப்பட்டது. RSS மற்றும் கபில் மிஸ்ராவின் போதனைகளை மேற்கோள் காட்டி மசூதிக்குள் சிலைகளை வைத்து முஸ்லிம்களை கொலை செய்யவும் சதி திட்டம் தீட்டி இருந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த செய்திகள் எதுவும் டெல்லி காவல் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறவில்லை.
கபில் மிஸ்ரா கடந்த ஆகஸ்ட் 2019 இல் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக கராவல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வடகிழக்கு டெல்லியில் CAA சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை காவல்துறை முன்னிலையில் வெளிப்படையாக மிரட்டியவர். அவரின் இப்பேச்சு வாட்ஸ் அப் குழுமத்தில் பல முறை பகிரப்பட்டது. ஆனால் இந்த தகவலை டெல்லி போலீஸ் இருட்டடிப்பு செய்துள்ளது. அதேபோன்று கபில் மிஸ்ரா CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு எதிராக பேசியவை பிப்ரவரி 25,26 மற்றும் 27 ஆம் தேதிகளில் பகிரப்பட்டு இருக்கிறது.
முஸ்லிம்களை படுகொலை செய்ய ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உதவி செய்ததும் இக்குழுமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடகிழக்கு டெல்லியின் கோண்டா பகுதியில் கொலை செய்யப்பட்ட பர்வேஸ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 குற்றவாளிகள் RSS இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.
அந்த வாட்ஸ்அப் குழுமத்தில் பிப்ரவவி 26 ஆம் தேதி பஜ்ரங் தள இயக்க உறுப்பினர்களின் தொடர்பு எண்களை பகிரும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது. சிறிது நேரத்தில் அந்த இயக்கத்தை சார்ந்த ராகுல் கோலாவின் ஃபேஸ்புக் பக்கம் பகிரப்பட்டது. இவர் படுகொலை நடந்த ஜோஹ்ரிபூர் பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 03 அன்று அனைத்து இந்துக்களையும் ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் மற்றும் ஹிந்து சேனா போன்ற அமைப்புகளில் இணையும்படியும் இந்து சமுதாயத்திற்கு ஏதாவது நெருக்கடி வந்தால், RSS போன்ற இயக்கங்கள் தான் உதவிக்கு வருவார்கள் என்றும் ஒருவர் கூறி இருந்தார்.

திட்டமிடல், கொலை, தீவைப்பு:

மார்ச் 04, ஆம் தேதி கலவரம் நடந்த பகுதியை சார்ந்த சிறுவர்களிடம் விசாரித்தபோது, முஸ்லிம்களை கலவரக்காரர்கள் தேடியும், துரத்தியும் கொன்றார்கள் என்று விவரித்தனர். இந்த சம்பவத்தை இந்துத்துவ கும்பல் எப்படி திட்டமிட்டனர், தாக்கினர், கொலை செய்தனர் என்பது அந்த குழுமத்தில் நடைபெற்ற உரையாடல் மூலம் தெரிய வந்தது.

லோகேஷ் சோலங்கி (19 வயது) டெல்லி கலவரத்தில் பல்வேறு கொலைகளை செய்ததற்காக கைது செய்யப்பட்டான். பிப்ரவரி 26 ஆம் தேதி இரவு 11.39 மணியளவில் வாட்ஸ்அப் குழுமத்தில் இவ்வாறு குறிப்பிட்டான்: “சகோதரர்களே, நான் லோகேஷ் சோலங்கி, கங்கா விஹார் பகுதியை சார்ந்தவன். உங்களில் யாருக்காவது ஏதாவது பிரச்சனைகள் என்றால் உடனே என்னை தொடர்புகொள்ளுங்கள், என்னிடம் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் உள்ளன, நான் என்னுடைய கங்கா விஹார் அணியை கூப்பிட்டுக் கொண்டு அங்கு வந்துவிடுவேன்.”

பிறகு இரவு 11.44 மணியளவில் பகிராதி விஹார் பகுதியில் இரண்டு முஸ்லிம்களை கொலை செய்து வடிகாலில் வீசியதாக அவன் குறிப்பிட்டான். பிப்ரவரி 25 ஆம் தேதி, நேற்று இரவு டெல்லியின் பகிரத்தி விஹார், கங்கா விஹார், கோகுல் புரி மற்றும் ஜோஹ்ரிப்பூர் பகுதியை சார்ந்த 23 முஸ்லிம்களின் தலைகளை நசுக்கியதாகவும் குழுமத்தில் உள்ள மற்றவர்களும் இவ்வாறே செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தான்.
கலவர விபரங்களை குழுமத்தில் பகிருமாறும் முஸ்லிம்களால் ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படுமானால் இந்த குரூப்பில் உள்ள அனைவரும் தங்கள் வீட்டின் மாடியில் கற்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

முஸ்லிம்களை கொலை செய்த பிறகு, குழுமத்தில் இருக்கும் ஒருவர் மசூதிக்கு தீ வைத்து விட்டதாகவும் தெரிவித்தார். இதை கேட்டவுடன் மற்றவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று பதிவிட ஆரம்பித்தனர்.
மோடியை புகழ்வது, முஸ்லிம்களை கேலி செய்வது, காவல்துறை செய்த உதவிகள் என பல பதிவுகளை இந்த குழுமத்தில் காண முடிந்தது.
நன்றி: News laundry

Comments are closed.