ஜாமியா மிலியா வன்முறை: பல்கலைக்கழக துணை வேந்தரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு கோரிக்கை

0

டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்மா அக்தரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

டெல்லியிலுள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக துணை வேந்தராக நஜ்மா அக்தர் பணிபுரிந்து வருகிறார்.  கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி இரவு காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து நூலகத்தை சூறையாடியும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியும் உள்ளனர். இது குறித்து நஜ்மா செய்தியாளர்கள் சந்திப்பில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இது பல்கலைக்கழக துணை வேந்தர் தேர்வு குழுவுக்கு கடும் அதிருப்தியை அளித்தது. இந்த குழு கடந்த 2018 ஆம் வருடம் நவம்பர் மாதம் 28 ஆம் தேதி அன்று இவர் பெயரை ஜனாதிபதியிடம் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்குச் சிபாரிசு செய்தது.   அப்போது இவருக்கு புலனாய்வுத்துறை அனுமதி பெற்ற பிறகு பதவி அளிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.   கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி அன்று ஜனாதிபதி இவரை பல்கலை துணை வேந்தராக தேர்வு செய்தார்.

இந்த தேர்வு குழுவில் ராமகிருஷ்ண ராமசாமி , டிபி சிங், மற்றும் எம் எஸ் சித்திக்கி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.   இதில் ராமசாமி ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.   அந்த கடிதத்தில் அவர் நஜ்மா அக்தருடைய நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை எனவும் பல முறை அவர் விதி மிறல்கள் செய்துள்ளதால் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு கரை ஏற்பட்டுள்ளது. உடனடியாக நஜ்மா அக்தரை துணை வேந்தர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ராமசாமி பதிலளிக்காமல் மறுத்து வருகிறார்.

“போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் நடத்திய விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தங்களது பல்கலை மாணவர்கள் நடத்தப்பட்ட விதம் மிகுந்த மன வேதனை அளிக்கிறது.  எந்தவித முன்னறிவிப்போ, அனுமதியின்ரி பல்கலை வளாகத்திற்குள் காவல்துறையினர் நுழைந்தனர். அதுவும் மாணவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர். நூலகத்துக்குள் அமர்ந்திருந்த மாணவர்கள் மீதும் தடியடி நடத்தியிருப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று ஜாமியா பல்கலை துணைவேந்தர் நஜ்மா அக்தர் தெரிவித்திருந்தார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது அவர்களை போலீசார்  தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

இதை கண்டித்து அலிகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அலிகர் பல்கலைக்கழக வளாகத்தில் அனைத்து நுழைவாயில்களையும் போலீசார் மூடினர்.

மாணவர்கள் மீதான தடியடியை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.