டெல்லி வன்முறை: பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் -எதிர்கட்சிகள்

0

பாஜகவின் பாசிச சட்டங்களான குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடியவர்கள் மீது இந்துத்துவ பயங்கரவாதிகளும் டெல்லி காவல் துறையினரும் இணைந்து வன்முறையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் புகார் குறித்து வெளிப்படையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து எதிர்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுகவின் கனிமொழி, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மனோஜ் ஜா ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினர்.

டெல்லி வன்முறையில் காவல் துறையினரின் பங்கு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்திய எதிர்கட்சி தலைவர்கள், அது தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் குடியரசுத் தலைவரிடம் வழங்கினர் அதில் கூறப்பட்டுள்ளதாவது:

“டெல்லி வன்முறையில் 53 பேர் உயிரிழந்தது குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுக்களை டெல்லி காவல் துறை அமைத்துள்ளது. எனினும், அந்த வன்முறை நிகழ்ந்ததற்கு டெல்லி காவல் துறைக்கும் முக்கியப் பங்கு உள்ளது.

போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீதும், இளைஞர்கள் மீதும் பொய்யான புகார்களை தெரிவித்த டெல்லி காவல் துறையினர், தற்போது அரசியல் தலைவர்கள் மீது குற்றம்சாட்டி சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி காவல் துறையினரே வன்முறையை தூண்டியதற்கு பல்வேறு வீடியோ ஆதாரங்கள் உள்ளன.

மேலும், வன்முறை சமயத்தில் பாஜக தலைவர்கள் வெறுப்புணத்வை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்தனர். அவர்களுக்கு எதிராகவும் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதனால் டெல்லி வன்முறை தொடர்பாக காவல் துறையினரே விசாரணை மேற்கொள்வது முறையாக இருக்காது. சட்ட துறை மீதான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டுமானால், இந்த விவகாரத்தில் வெளிப்படையான பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று எதிர்கட்சியினர் வழங்கிய மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.