எதிர்க்கருத்து கொண்டவர்களை ‘தேச விரோதிகள்’ என்று சொல்வது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் -நீதிபதி

0

குடியுரிமை திருத்தச சட்டத்திற்கு எதிராக, நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசு கொண்டுவரும் சட்டங்களை எதிர்த்து போராட அனைவருக்கும் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட் கலந்துகொண்டு பேசியதாவது: “நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், ‘ஒரு இந்து’ மற்றும் ‘ஒரு முஸ்லிம்’ என்ற கருத்தை நிராகரித்தனர். அவர்கள் இந்திய குடியரசை மட்டுமே அங்கீகரித்தனர்.

இந்திய அரசியலமைப்பு பன்மைத்துவத்தை எதிர்பார்க்கிறது. எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ இந்தியா மீது உரிமை கோர முடியாது. எனவே, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் அடையாளத்தை பாதுகாப்பது நமது நேர்மறையான கடமை.

சட்டத்தின் எல்லைக்குள், தாராளமய ஜனநாயக நாடுகள் தங்கள் குடிமக்கள் தங்கள் கருத்துக்களை ஒவ்வொரு முறையிலும் வெளிப்படுத்தும் உரிமையை உறுதி செய்கின்றன. இதில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உண்டு.

அரசியலமைப்பு பாதுகாப்பதற்கும், ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கும் நாம் உறுதி எடுத்துள்ளோம். அந்த வகையில், இந்தியாவில் எதிர்க்கருத்து கொண்டவர்களையும், கருத்து வேறுபாடு கொண்டவர்களையும் “தேச விரோதிகள்’ என்று சொல்வது ஜனநாயகத்தின் இதயத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்” இவ்வாறு நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசியுள்ளார்.

Comments are closed.