Dr.அப்துல் கலாம் அவர்களின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் காவி பயங்கரவாதம்

0

-ஷேக் பைசல்

புகழ்பெற்ற விஞ்ஞானியான டாக்டர் APJ. அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் சாதனைகளை வருங்கால சந்ததிகளுக்கு எடுத்துரைப்பதற்கு பதிலாக அந்த மாமேதையின் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக மத சாயத்தை பூசி விட்டிருக்கிறது மத்திய பாஜக அரசு. இந்த சூழ்ச்சியை எடுத்துரைத்து அவர் மதவாதியல்ல விஞ்ஞானியே என விளக்குவது தான் இக்கட்டுரையின் நோக்கம்.
முதலில் Dr. அப்துல்கலாம் அவர்களின் சாதனை குறிப்புகளை பார்த்துவிட்டு பிறகு பாஜகாவின் சூழ்ச்சியை பற்றி பார்ப்போம்.
ஏவுகனை நாயகனான Dr. அப்துல் கலாம் அவர்கள் திரு. ஜைனுலாப்தீன் மற்றும் திருமதி. ஆஷியம்மா அவர்களுக்கு 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில் ராமேஸ்வரத்தில் பிறந்தார்.
வறுமையின் சூழலில் வளர்ந்து வந்த மாமேதை கலாம் அவர்கள் “விண்வெளி பொறியியல்” பட்டபடிப்பை 1960 ஆம் ஆண்டு சென்னையில் பயின்று முடித்தார்.
பிறகு 1969 ஆம் ஆண்டு ISRO வில் இணைந்தார். அங்கு முதல் உள்நாட்டு செயற்கோளை பாய்ச்சுவதற்கான திட்டத்தின் இயக்குனராக ஆனார்.
அத்திட்த்தின் படி 1980 ஆம் ஆண்டு உள்நாட்டு செயற்கோள் (S.L.V-|||) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இதுதான் கலாம் அவர்களின் முதல் மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது. இத்திட்டத்தில் வேலை செய்ய தொடங்கிய பின் தான் கலாம் அவர்கள் தன்னையே கண்டுபிடித்ததாக கூறினார்.
1992 முதல் 1999 வரை பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றினார்.
இந்த காலகட்டத்தில் தான் பொக்ரான்-|| அணு ஆயுத சோதனை 1998-ல் நடந்தது. இதில் கலாம் அவர்கள் அரசியல் ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் மேலும் சோதனை கட்டத்தில் தலைமை திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். இது கலாம் அவர்களை உலகளவில் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
2002 முதல் 2007 வரை குடியரசு தலைவராக ராஷ்டிரபதி பவனை அலங்கரித்தார்.
மேலும் மிகச்சிறந்த ஆசிரியராக விளங்கிய Dr. அப்துல்கலாம் அவர்கள் பாட்னா இந்திய மேலாண்மை நிறுவனங்களில் வருகை பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரம் இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தராகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும், சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகை பேராசிரியராகவும் பணியாற்றினார்.
டாக்டர். அப்துல்கலாம் அவர்கள் இஸ்லாமியராக பிறந்து, அதனடிப்படையிலே வாழ்ந்து மறைந்தாலும் கூட அவர் குரானை படித்தது போன்று அனைத்து மத நூல்களையும் படித்து பார்த்து அதில் இருக்கும் நல்ல கருத்துக்களை மேற்கோள் காட்டி பேசும் வழக்கம் உடையவர். அந்த அடிப்படையில் தான் பகவத்கீதை மற்றும் பைபிளில் உள்ள சில நற்கருத்துகளை மேற்கோள்காட்டி பேசியுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் அதிகமாக மேற்கோள் காட்டிய நூல் திருக்குறல் தான். அதன் மூலம் மதசார்பற்ற தலைவராக விளங்கியவர்.
இவ்வாறாக மிகச்சிறந்த ஆசிரியராக, உயர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளாராக, மாணவச் செல்வங்களுக்கு வழிகாட்டியாக, நாட்டின் குடியரசு தலைவராக, மதசார்பற்றவராக திகழ்ந்தார்.
ஆனால் அப்பேற்பட்ட உண்ணதமான மாமனிதருக்கு மத்திய பாஜக அரசு மத சாயம் பூசி பார்ப்பதென்பது எவ்வளவு பெரிய நயவஞ்சகத்தனம்.
டாக்டர். அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றிய திரு. பொன்ராஜ் அவர்கள் சமீபத்தில் News7Tamil க்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டது என்னவென்றால் உருவ வழிபாட்டை விரும்பாத கொள்கையே அப்துல்கலாம் அவர்களின் ஓரிறை கொள்கை எனவே கலாம் அவர்களுக்கு சிலை வைத்ததே தவறு என்று கண்டனம் செய்தார். சிலை வைத்ததே தவறு என்று சொன்னால் சிலையில் வீணையை வைத்ததும் அதன் அருகில் கீதையை வைத்ததும் எவ்வளவு பெரிய மாபாதக செயல்.
எனவே  அவரை ஒரு விஞ்ஞானியாக காட்டாமல், தலைசிறந்த ஆசிரியராக காட்சிபடுத்தாமல், மாணவச் செல்வங்களின் வழிகாட்டியாக உருவக படுத்தாமல், எந்த பொருத்தமுமே இல்லாத மதவாதியாக காவி வண்ண சிலை வடித்திருப்பது பாஜகவின் மதவெறி அரசியலின் வெறியாட்டத்தையே காட்டுகிறது.
அதேசமயம் பாஜகவினருக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஆம், யார் எல்லாம் புகழ்பெற்ற தலைவர்களாக திகழ்கிறார்களோ அவர்களையெல்லாம் அவர்களின் மறைவிற்கு பிறகு சொந்தம் கொண்டாடுவது பாஜகாவின் கொள்கைகளில் ஒன்று.
அதற்கு மிகச் சிறந்த உதாரணம் தான் சட்ட மேதை டாக்டர். அம்பேத்கர் அவர்கள். டாக்டர். அம்பேத்கர் அவர்களின் கொள்கையே ஆரிய சமூகத்தின் வர்ணாஸிரம கொள்கையை எதிர்ப்பது தான்.
அம்பேத்கர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்-இன் சித்தாந்தங்கள் நேரெதிரானவை. அம்பேத்கர், இந்திய தேசியம், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக்காக போராடியவர். ஆனால் ஆர்.எஸ்.எஸ்-ன் சித்தாந்தமோ பார்ப்பனியத்தன்மை வாய்ந்த இந்துமதக் கருதுகோள், இந்து ராஷ்டிரம் என்ற மத அடிப்படைவாத கொள்கையை நடைமுறை படுத்த பல சூழ்ச்சிகளை செய்வதாகும்.
இறுதியாக அம்பேத்கர் அவர்கள் வர்ணாஸிரம ஜாதி கொடுமையை எதிர்பதற்காக இந்து மதத்தை துறந்து புத்த மதத்தை ஏற்றுக்கொண்டவர்.
ஆனால் அப்பேற்றபட்ட புத்த மதத்தை சேர்ந்த அம்பேத்கரை தான் RSS சித்தாந்ததில் நம்பிக்கை வைத்திருந்தார் எனப் புளுகியிருக்கிறார் RSS-ன் தலைவரான மோகன் பகவத். எவ்வளவு பெரிய பொய் பிரச்சாரம் இது.
அதேபோன்று காந்தியடிகளும் ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டால் ஈர்க்கப்பட்டார் என்றும் கூறினார்கள். ஆனால் காந்தியடிகளை ஈவு இரக்கமின்றி கொன்றதே ஹிந்துத்துவா வாதியான நாதுராம் கோட்சே தான் என்பது உலகறிந்த உண்மை.
இவ்வளவு ஏன் RSS-ன் கொள்கையை துளியும் ஏற்றுக்கொள்ளாத திரு. காமராஜர் அவர்களை கூட பாஸிஸ வாதிகள் சொந்தம் கொண்டாடி கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதன் அடிப்படையில் தான் டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு வைக்கப்பட்டு இருக்கும் சிலையையும் நாம் பார்க்க வேண்டும்.
அதைவிட்டுவிட்டு விஞ்ஞானியான Dr. அப்துல்கலாம் அவர்களை பகவத்கீதையை படித்தார், வீணையை வாசித்தார் ஆகவே இவ்வாறாக சிலை வைக்கப்பட்டுள்ளது என்று சொல்லுவதெல்லாம் மத சாயத்தை திசை திருப்புவதற்காக சொல்லப்படும்  போலி காரணிகளே.
ஆம், புத்த மதத்தை தழுவிய அம்பேத்கரை எவ்வாறு ஹிந்துத்துவா வாதியாக சித்திரிக்க முயற்சி செய்கிறார்களோ, காந்தியடிகளையும், காமராஜரையும் கூட எவ்வாறு ஹிந்துத்துவா வாதிகளாக சித்தரிக்க முயற்சி செய்கிறார்களோ அதேபோன்று தான் முஸ்லீமாக பிறந்து வளர்ந்து அனைத்து மதத்தினரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டு மதசார்பற்ற தலைவராகவும், தலைசிறந்த விஞ்ஞானியாகவும் விளங்கிய அப்துல்கலாம் அவர்களையும் ஹிந்துத்துவா வாதியாக காட்ட எடுக்கப்பட்டிருக்கும் முதல் முயற்சி தான் இந்த காவி வண்ண, வீணை கொண்ட சிலையும் அதன் அருகில் உள்ள கீதையும்.
இப்பிரச்சனைக்கு தீர்வாக நம்மில் பலர் இன்று நினைப்பது போல் பகவத்கீதையின் அருகில் குரானையும், பைபிளையும் வைத்தால் மட்டும் பிரச்சனை தீர்ந்துவிடாது. மாறாக கலாம் அவர்களின் சிலையையே முழுமையாக மாற்றியமைக்க வேண்டும்.
வேற நூல்கள் வைத்தாலும் அதனை ஹிந்துவா சக்திகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாற்றார்கள். அதுதான் கலாம் அவர்களின் அண்ணன் பேரன் திரு. சலீம் அவர்களுக்கு நிகழ்ந்தது.
குரானையும், பைபிளையும் அப்துல்கலாம் அவர்களின் சிலை அருகில் வைத்தது ஏதோ மிகப்பெரிய தேச துரோக குற்றச் செயல் போன்று சித்தரிக்கப்பட்டு அதற்காக மத்திய புலனாய்வு துறையினர் அப்துல்கலாம் அவர்களின் குடும்பத்தாரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து மிரட்டியது.
புனித நூல்கள் வைக்கப்பட்டதற்காக கலாம் அவர்களின் குடும்பத்தாரையே விசாரணை என்ற பெயரில் பாஜக அரசு மிரட்டுகிறது என்று சொன்னால் இனி இதை வேறுயாரும் மனதளவில் கூட எதிர்க்ககூடாது என்பதுதான் பாஜகாவின் திட்டம்.
இப்படி நம்மையெல்லாம் அச்சுறுத்தி அடிமை படுத்த துடித்துக்கொண்டிருக்கும் மதவெறி கும்பலை கண்டு பயந்து அவர்களை எதிர்க்க நாம் மறுத்தோம் என்று சொன்னால் இன்று இளைஞர்களால் போற்றபடும் திரு. சகாயம் IAS அவர்கள் கூட நாளை ஹிந்துத்துவாவை ஏற்றுக்கொண்ட தலைவராக சித்தரித்து காட்டப்படுவார்.
பாஸிஸ வாதிகள் எப்பொழுதுமே சூழ்ச்சி செய்வதில் மிகவும் கைதேர்ந்தவர்கள். ஆகவே தான் அம்பேத்கரை சொந்தம் கொண்டாட முயற்சிக்கும் போது எல்லா திசைகளில் இருந்தும் எழும்பிய மிகப்பெரிய எதிர்ப்பு போன்று கலாம் அவர்களை சொந்தம் கொண்டாடும் போது அனைத்து திசையில் இருந்தும் எதிர்ப்புகள் வராமல் சூழ்ச்சிகளை முன்கூட்டியே மிக தெளிவாக செய்துவிட்டார்கள்.
ஆம், பாஸிஸத்தின் சூழ்ச்சி கலாம் அவர்களின் சமூகமே கலாம் அவர்களுக்கு எதிராக பேச வைத்துள்ளது.
விஞ்ஞானியை எப்படி மதவாதியாக காட்டலாம் என்று கேட்பதற்கு பதிலாக கலாம் அவர்களின் தவறுகளை தோண்டி தோண்டி ஆராய்ச்சி செய்து, என்றோ கலாம் அவர்கள் பேசிய காணொளியை எல்லாம் அவரின் மரணத்திற்கு பிறகு இன்று முகநூலில் பதிவிட்டு மரணித்தவரின் மாண்பையே மாய்கின்றனர்.
இத்தனைக்கும் கலாம் அவர்களின் மார்க்கமான இஸ்லாம் மரணித்தவர்களின் குறைகளை பேசுவதை தடை செய்து இருந்தும் கூட சில விவேகமில்லாத வீண் பேச்சாளர்கள் பொது மேடைகளில் வைத்து மரணித்தவரின் மானத்தை வாங்குவது என்பது இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரான ஒரு நிலைபாடு ஆகும்.
ஒரு மனிதர் எதுவாக இருந்தாரோ, எந்த அடிப்படையில் புகழ்பெற்றாரோ, எவ்வாறு நூறு கோடிக்கும் மேலான மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தாரோ அவ்வாறே அவரை காட்சி படுத்த வேண்டும் என்பதுதான் யதார்த்தமான ஒன்று. ஆனால் யதார்தத்திற்கு மாறாக விஞ்ஞானியை மதவாதியாக சிலை வடித்திருப்பது தான் இங்கு பிரச்சனையே.
அதாவது டாக்டர். அப்துல்கலாம் அவர்கள் முஸ்லீமாகவோ அல்லது ஹிந்துவாகவோ அல்லாமல் ஒரு சிறந்த விஞ்ஞானி என்ற அடிப்படையில் தான் கோடான கோடி மக்களின் உள்ளங்களில் இன்றும் வாழ்கிறார்.
அப்பேற்பட்ட தலைசிறந்த விஞ்ஞானியை தான் ஹிந்துத்துவா சக்திகள் காவி மத சாயம் பூசி ஒரு மதத்தின் விளம்பர தாரராக சித்தரித்து சிலை வடித்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இச்சூழ்ச்சியை எதிர்த்து போராட வேண்டிய பொறுப்பிலுள்ள சிலரோ கலாம் அவர்கள் தன்னுடைய மதத்திற்கு எதிரான செயலை செய்தார் எனவே காவி சிலைக்கு எதிராக வாய் திறப்பது அவசியமற்றது என்று கூறி மேலும் அந்த விஞ்ஞானிக்கு மத சாயத்தை அள்ளி தெளித்துவிடுகின்றனர். இவர்களின் இந்த குறை சொல்லி திரியும் அணுகுமுறை பாஸிஸ சூழ்ச்சிக்கு மேலும் ஊதுகோளாக அமைந்துவிடுகிறது.
இன்னும் சுருக்கமாக சொல்லி புரிய வைக்க வேண்டும் என்று சொன்னால் சாமியார்களை போன்றோ, மத போதகர்களை போன்றோ மத பிரச்சாரத்தின் மூலம் புகழ்பெற்றவரல்ல கலாம் அவர்கள்.
ஆகவே ஏவுகனை நாயகனுக்கு காவி வண்ணம் பூசுவதும், கீதையை வைத்து மதவாதியாக காட்டுவதும், கீதைக்கு அருகில் வேற நூல்களை வைத்து சமரசம் செய்ய நினைப்பதும் உண்மைக்கு புறம்பானது.
டாக்டர். அப்துல்கலாம் அவர்கள் மிகச்சிறந்த விஞ்ஞானி மேலும் மாணவச் செல்வங்களின் முன்மாதிரி.
எனவே அவரை விஞ்ஞானியாக, ஆசிரியராக மேலும் இளைய தலைமுறையினரின் வழிகாட்டியாக மட்டுமே காட்சி படுத்த முடியும்.
பாஸிஸத்தின் சூழ்ச்சியை முறியடிப்பதும், மத சிலையால் கலாம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கலங்கத்தை துடைப்பதும் டாக்டர். அப்துல்கலாம் அவர்களை நேசிக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனுடைய தலையாய கடமை.
“காவி மதவாத சாயம் பூசப்பட்டு, வீணை இணைக்கப்பட்ட சிலையை அகற்றுவோம்”
“விஞ்ஞானியாக, ஆசிரியராக, இளைய சமூகத்தின் வழிகாட்டியாக காட்சிபடுத்த முயற்சி எடுப்போம்”

Comments are closed.