டாக்டர் கஃபீல் கான் மீதான சிறை தண்டனை மேலும் நீட்டிப்பு

0

சிஏஏ சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர் கஃபீல்கான் மீதான சிறைத் தண்டனையை மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது உ.பி யோகி அரசு.

இதுகுறித்து உத்திரப்பிரதேச அரசின் உள்துறை செயலாளர் வினய் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், “அலிகார் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்ட ஆலோசனை வாரியம் ஆகியவை அளித்த பரிந்துரையில், கஃபீல் கான் தொடர்ந்து பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவை உத்திரப்பிரதேச அரசு பிறப்பித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஜனநாயக முறையில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது மாணவர்கள் மத்தியில் பேசிய டாக்டர் கஃபீல் கான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உ.பி. அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து மதுரா சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு உத்திர பிரதேசம் கோராக்பூரில் பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் கிட்டத்தட்ட 100 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. அவர்கள் அனைவருமே அந்த மருத்துவமனையில் உள்ள மூளைவீக்க நோயாளிகளுக்கான பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். அப்போது அங்கு பணிபுரிந்த டாக்டர் கஃபீல்கான் அவரது சொந்த செலவில் ஆக்சிஜன் ஏற்பாடு செய்து பல குழந்தைகளை காப்பாற்றியதாக அவரை பலர் பாராட்டியிருந்தனர்.

ஆனால் குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கஃபீல் கான் மீதே வழக்கு பதிவு செய்த உபி அரசு, அவரை கைது செய்து சிறையிலடைத்தது. சிறையில் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்த கஃபீல்கான் அதிலிருந்து ஜாமீனில் விடுதலையானார். தற்போது சிஏஏ எதிர்ப்பு தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.