அட்டப்பாடி என்கௌண்டர்..!

0

அட்டப்பாடி என்கௌண்டர்

சில விதிவிலக்குகளைத் தவிர்த்து பொதுவாக ஆட்சியாளர்களுக்கு மனித உரிமைகள் குறித்தும் மக்கள் நலம் குறித்தும் பெரியளவில் அக்கறை கிடையாது என்பது பொதுவான குற்றச்சாட்டு. கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட என்கௌண்டர் படுகொலைகள் இந்தக் கூற்றை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளன.

கேரளாவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஒழிப்பதற்காக ‘தண்டர்போல்ட்’ என்ற சிறப்புப் படை முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்டது. அவசரகால கட்டத்திற்குப் பின்னர் ஒரு சில சம்பவங்களை தவிர்த்து கேரள மாநிலத்தில் மாவோயிஸ்ட் பிரச்சனை பெரிதாக எழும்பியது இல்லை. ஆனால் 2016ல் ஆட்சிக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் இதுவரை மூன்று என்கௌண்டர்கள் நடைபெற்றுள்ளன. அக்டோபர் 28 அன்று பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி கிராமத்தை ஒட்டிய அகாலி காட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட என்கௌண்டர் தாக்குதலில் நான்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது.

இதற்கு முன்னர் 2016 நவம்பரில் நிலாம்பூர் என்கௌண்டரில் இருவரும் (விரிவான தகவல்களுக்கு புதிய விடியல் ஜனவரி 01-15, 2017 இதழை காணவும்) 2016 மார்ச் மாதம் நடத்தப்பட்ட என்கௌண்டரில் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

‘மாவோயிஸ்டுகள் காவல்துறையினரை நோக்கி சுட்டனர்; தங்களை தற்காத்துக்கொள்ள காவல்துறையினர் திருப்பிச் சுட்டதில் இவர்கள் கொல்லப்பட்டனர்’ என்ற பொது புராணம் இங்கும் கூறப்பட்டது. ஆனால் சரணடைவதற்கு வந்த மாவோயிஸ்டுகளை தண்டர்போல்ட் படையினர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சுட்டுக் கொலை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்களை தவிர்த்து ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த என்கௌண்டர் படுகொலைகளை வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

ரமா என்ற பெண் உட்பட மணிவாசகம், அரவிந்த் மற்றும் கார்த்தி ஆகிய நான்கு நபர்கள் என்கௌண்டரில் கொல்லப்பட்டுள்ளனர். இதில் மணிவாசகம் மற்றும் அரவிந்த் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ரமாவும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்று சில நாட்கள் கழித்து கூறப்பட்டது. இந்த குழுவின் தலைவர் மணிவாசகம் என்று காவல்துறையும் அரசாங்கமும் அறிவிக்கிறது. நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த மணிவாசகம் சரணடைவதற்கு தயாராக இருந்ததாக இந்த மாவோயிஸ்டுகள் சரண் அடைவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட ஆதிவாசிகள் தாய்க்குல சங்கத்தின் தலைவர் ஷிவானி தெரிவித்துள்ளார். இதே கருத்தை முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார். மூவர் உணவருந்திக் கொண்டிருக்கும் போது கொல்லப்பட்டதாகவும் மணிவாசகம் மறுதினம் கஸ்டடியில் வைத்து கொல்லப்பட்டதாகவும் சி.பி.ஐ.யின் உண்மை அறியும் குழு தெரிவிக்கிறது.

இந்நிலையில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்கள் மணிவாசகத்தின் தங்கை மற்றும் கார்திக்கின் தாய் ஆகியோரை கூட இறந்த உடல்களைப் பார்ப்பதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் உத்தரவை பெற்ற பின்னரே இறந்த உடல்களை இவர்கள் பார்க்க முடிந்தது. அந்த அளவிற்கு கேரள அரசும் காவல்துறையும் கடும் நெருக்கடிகளை கொடுத்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் அரசாங்கத்தில் என்கௌண்டர்கள் நடப்பது புதிதல்ல. பிப்ரவரி 18, 1970 அரிக்கோடு அன்று மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த வர்கீஸ் என்பவரை காவல்துறையினர் வயநாட்டில் என்கௌண்டரில் சுட்டுக் கொன்றனர். சி.பி.எம். உறுப்பினராக இருந்த இவர் பின்னர் நக்ஸல் அமைப்பில் இணைந்தார். ‘எங்களை நோக்கி சுட்டார்; தற்காத்துக் கொள்ளவே நாங்கள் திருப்பிச் சுட்டோம்’ என்ற இதே கதை அப்போதும் கூறப்பட்டது. கேரளாவில் பழங்குடியின மக்களை கொத்தடிமை முறையில் இருந்து மீட்டதில் முக்கிய பங்கு வகித்த இவர் பின்னாளில் ‘கேரளாவின் சேகுவேரா’ என்று அழைக்கப்பட்டார். வர்கீஸ் கொல்லப்பட்டு ஏறத்தாழ 40 வருடங்களுக்குப் பின் அவரை சுட்ட சி.ஆர்.பி.எஃப். கான்ஸ்டபிள் ராமச்சந்திரன் நாயர் அவராக முன்வந்து கொடுத்த வாக்குமூலம் என்கௌண்டர்களின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டியது.

குற்ற உணர்வு தன் மனதை உறுத்தியதால் உண்மையை ஒப்புக் கொண்டார் இந்த கான்ஸ்டபிள். கேரளாவின் அப்போதைய ஐ.ஜி. லக்ஷ்மனண்ணாவின் உத்தரவின் பேரில்தான், ஆயுதங்கள் ஏதுமின்றி இருந்த வர்கீசை அருகில் இருந்து தான் சுட்டதாக ராமச்சந்திரன் நாயர் கூறினார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அக்டோபர் 28, 2010 அன்று லக்ஷ்மணன்னாவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 75.

பயங்கரவாதிகள், மாவோயிஸ்டுகள், நக்சல்கள் என பல்வேறு பெயர்களில் கொல்லப்படுபவர்களில் பெரும்பான்மையினர் அப்பாவிகள் என்பதே இவை உணர்த்தும் உண்மைகள். ‘‘கொல்லப்பட்டவர்கள் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமே அல்லாமல் சுட்டுக் கொல்வதற்கு காவல்துறைக்கு அனுமதி இல்லை’’ என்று கூறி அட்டப்பாடி என்கௌண்டரில் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கமால் பாஷா. நடத்தப்பட்ட என்கௌண்டர் கொலைகளை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் அரசாங்கம் இதனை எதிர்த்து துண்டு பிரசுரம் விநியோகம் செய்தவர்களையும் கருப்பு சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யு‌.ஏ‌.பி‌.ஏ.) கீழ் கைது செய்துள்ளது. இதனையும் நியாயப்படுத்திய அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் ‘கைதுசெய்யப்பட்டவர்கள் ஒன்றும் அப்பாவிகள் கிடையாது’ என்றும் கூறியுள்ளார். இதே சட்டத்தின் கீழ் இவர்களின் கட்சியை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டதை பினராய் இப்போது மறந்து விட்டார் போலும்.
மக்கள் நலனிலும் மனித உரிமைகளிலும் அக்கறை கொண்டவர்கள் கம்யூனிஸ்ட்கள் என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது. மேற்கு வங்கத்தின் நந்திகிராமில் இவர்களின் அத்துமீறல்களை கண்டோம். தற்போது கேரளாவிலும் கண்டு வருகிறோம்

Comments are closed.