காஷ்மிர் குறித்து ஃபேஸ்புக் பதிவு: பாஸ்போர்ட்டை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு!

0

காஷ்மிர் விவகாரம் குறித்து மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து பதிவிட்ட ஐந்து காஷ்மிரிகளின் பாஸ்போர்டை ரத்து செய்யும் முடிவில் மத்திய அரசு உள்ளதாக ஆங்கில ஊடகமான ஹஃப்பிங்ஸ்டன் போஸ்ட்டில் (huffingtonpost) செய்தி வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மிர் மாநில காவல்துறை அதிகாரி ஆகஸ்ட் 29ஆம் தேதி பதிவிட்டுள்ள ட்விட்டில், “ஐந்து பேரின் பெயர்களும் அவர்களுடைய ஃபேஸ்புக் புரோபைல் போட்டோவையும் வெளியிட்டிருந்தார். அந்த ஐந்து பேரும் போலிச் செய்திகளையும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் செய்தி பரப்புகின்றனர் என்று காவல்துறை குறிப்பிட்டிருந்தது என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூஞ்ச் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தற்போது குவைத்தில் பணியாற்றிவருகிறார். அவர், காஷ்மிர் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிடுகிறார் என்று அவர் மீது பல்வேறு பிரிவுகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஆகஸ்ட் 20ஆம் தேதி ஸ்ரீநகரை சேர்ந்த ஒருவர் ஃபேஸ்புக் பதிவில், காஷ்மிரியை இந்திய ராணுவம் துன்புறுத்தியது என்று பதிவிட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து ஹஃப்பிங்ஸ்டன் போஸ்ட்டுக்கு பேட்டியளித்த ராஜோரி மாவட்ட சிறப்பு காவல்கண்காணிப்பாளர், “அந்த ஐந்து பேரின் பதிவு இருவேறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளது. இந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அவர்கள் இந்திய அரசுக்கு எதிராக ஜிகாதிகளாக மாறுவதற்கு தயார் என்று கூறியுள்ளனர். அவர்களை இந்தியாவுக்கு வரவழைப்பதற்காக பாஸ்போர்டை ரத்து செய்யும் பணியும் கட்டாயம் தொடங்கும்’ என்று தெரிவித்தார்.

Leave A Reply