கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர், ஃபாத்திமா லத்தீஃப் (19). சென்னை ஐஐடியில் M.A. Humanities முதலாமாண்டு படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்த அவர், சனிக்கிழமை விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
தனது துறையின் இணை பேராசிரியராக உள்ள சுதர்சன் பத்மனாபன் தான் தனது மரணத்திற்குக் காரணம் என்று அவர் தனது தற்கொலைக் குறிப்பை செல்போனில் பதிவிட்டுள்ளார்.
ஐஐடி நடத்திய நுழைவு தேர்வில் இந்தியாவிலேயே முதலாவது மாணவியாக தேர்வாகி ஐஐடியில் முதுகலை மானுடவியல் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார். வகுப்பிலும் அவர் முதல் மாணவியாகவே திகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து அவரது தந்தை அப்துல் லத்தீஃப் கூறுகையில், “தற்கொலை செய்துக்கொள்ளும் அளவிற்கு எனது மகள் சென்றிருக்க மாட்டார். சாதிரீதியாகவும், மதரீதியாகவும் பாரபட்சத்தை பேராசிரியரிடமிருந்து, பாத்திமா எதிர்கொண்டார். பெயர் முஸ்லிமாக இருப்பதுதான் அங்கு பிரச்சினையாக உள்ளது என எனது மகள் தெரிவிருந்தார். ஒவ்வொரு தேர்விலும் ஒரு முஸ்லிம் முதலிடம் வருவதை மற்றவர்கள் விரும்பவில்லை” இவ்வாறு பாத்திமா லதீஃப் தந்தை தெரிவித்தார்.
ஃபாத்திமா லத்தீஃப்பின் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் மீது சென்னை ஐ.ஐ.டி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய செயற்குழு தெரிவித்துள்ளது.