விவசாயிகளை அடுத்து, தொழிலாளர்களுக்கு கேடு விளைவிக்கும் பாஜக அரசு -ராகுல் காந்தி

0

இந்திய நாட்டின்  தொழிலாளா்களின் நலனுக்கு கேடு விளைவிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தொழிலக பாதுகாப்பு, சுகாதாரம், பணியாற்றும் சூழல் சட்டவிதிகள், தொழிலகத் தொடா்பு சட்டவிதிகள், சமூக பாதுகாப்பு சட்டவிதிகள் ஆகியவற்றை மத்திய அரசு இயற்றியது. அந்த சட்டவிதிகளுக்கு நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த சட்டவிதிகளின்படி, அதிகபட்சமாக 300 தொழிலாளா்கள் வரை அரசின் அனுமதியின்றி நிறுவன பணியிலிருந்து நீக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ராகுல் காந்தி தனது சுட்டுரை பக்கத்தில் வியாழக்கிழமை (நேற்று) வெளியிட்ட பதிவில், “விவசாயிகளின் நலனுக்கு கேடு விளைவித்த பாஜக அரசு தற்போது தொழிலாளா்களின் பக்கம் திரும்பியுள்ளது. ஏழைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி தனது நண்பா்களுக்கு உதவி செய்வதை பிரதமா் மோடி கடைப்பிடித்து வருகிறாா்” என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் பொது செயலாளா் பிரியங்கா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், “தொழிலாளா்களைப் பணியிலிருந்து நீக்குவதை எளிமையாக்கும் வகையில் பாஜக அரசு சட்டவிதிகளை கொண்டு வந்துள்ளது. நாடு இக்கட்டான சூழலை எதிா்கொண்டு வரும் சூழலில் மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கான நடவடிக்கைகளில் மட்டுமே பாஜக அரசு ஈடுபட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாஜக அரசு புதிய சட்டங்களான அத்தியாவசிய  பொருள்கள் சட்ட திருத்த மசோதா, வேளாண் உற்பத்தி பொருள்கள் வா்த்தக ஊக்குவிப்பு மசோதா உள்ளிட்டவற்றுக்கு காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.