மத்திய அரசின் கொள்கை ரீதியிலான தவறுகளே GDP வீழ்ச்சிக்கு காரணம் -பாப்புலர் ஃப்ரண்ட்

0

கடந்த ஆறு ஆண்டுகளாக மோடி அரசாங்கத்தின் கொள்கை தவறுகளே இந்தியாவின் ஜிடிபி 23% கீழ்நோக்கி வீழ்ச்சி அடைந்ததற்கு காரணம் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்று சுட்டிக்காட்டியது.நமது பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கான அனைத்து அறிகுறிகளும் தென்பட்டன. எட்டு காலாண்டுகளாக தொடர்ச்சியாக அது வீழ்ச்சி அடைந்து வருகிறது. இறுதி இரண்டு காலாண்டுகளைத் தவிர கொரோனா ஊரடங்கை இந்நிலைமைக்கு காரணமாக கூற இயலாது.

பணமதிப்பிழப்பு, மோசமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி என்று மோடி பிரதமராக வந்ததிலிருந்தே மேற்கொள்ளப்பட்ட மக்கள் விரோத அபத்தமான பொருளாதார கொள்கைகளுக்கான விலையை நாடு கொடுத்து வருகிறது. ஏற்கெனவே சுருங்கி வந்த பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மைக்கு போதிய சிந்தனைகள் இன்றி மோசமாக நடைமுறைப்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கு மற்றொரு பேரிடியாக இறங்கியது. வெற்று அறிவிப்புகள் மற்றும் புள்ளி விபரங்களில் விளையாடுவதைத் தவிர நிலைமையை சீர் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதற்கு மாற்றாக மத மோதல்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் தொடர்புடைய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது.சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான உண்மையான வழிமுறைகளை எடுக்குமாறும் வேலைவாய்ப்புகளை வழங்குமாறும் மத்திய அரசாங்கத்தை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கேட்டுக் கொண்டது.

டெல்லி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் காவல்துறையினர் அதிகாரத்தில் உள்ள தங்கள் எஜமானர்களின் அரசியல் விருப்பங்களை பூர்த்தி செய்ய தங்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு உண்மை அறியும் அறிக்கைகள் வட கிழக்கு டெல்லி வன்முறையின் போது டெல்லி காவல்துறை வன்முறையை தடுக்க தவறியது, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக சார்புடன் நடந்து கொண்டது குறித்து குறிப்பிட்டுள்ளன. வன்முறைகளுக்கு பின்னர் காவல்துறை அப்பாவிகளை துன்புறுத்துவது, சட்ட நிவாரணங்களை மேற்கொள்ளும் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்கி வரும் வழக்கறிஞர்களுக்கு எதிராக வழக்குகளை புனைவது ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்ட் 5 பூமி பூஜைக்கு முன்னர் பல்வேறு அப்பாவிகள் கஸ்டடியில் எடுக்கப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

முஸ்லிம் இயக்கங்கள் நியாயமின்றி குற்றம்சாட்டப்பட்டு அவற்றின் உறுப்பினர்கள் ஓரம் கட்டப்பட்டு பொய் வழக்குகளால் துன்புறுத்தப்படுகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் காவல்துறையின் இந்த எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக குரல் கொடுக்குமாறு மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூகத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு விடுக்கிறது.கஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீண்டும் வழங்குமாறு மற்றொரு தீர்மானத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மத்திய அரசை கேட்டுக் கொண்டது. கஷ்மீர் மக்கள் மீது விதிக்கப்பட்ட ஊரடங்கு ஓராண்டை கடந்துள்ளது. இது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான முடிவு. கஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன உத்தரவாதங்களையும் இம்முடிவு மீறியுள்ளது. ஏற்கெனவே மோசமாக இருந்த நிலையை இந்த ஊரடங்கு இன்னும் மோசமாக்கியுள்ளது. கஷ்மீர் பள்ளத்தாக்கில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. முகர்ரம் தின ஊர்வலங்களின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 1000 நபர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

மத்திய அரசாங்கத்தின் கஷ்மீர் கொள்கை முழு தோல்வியாக மாறி உள்ளது. பலத்தைப் பிரயோகித்தும் உரிமைகளை மறுத்தும் சமாதானம் மற்றும் நிலைத் தன்மையை அடைய முடியாது. கஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மதிப்பது மூலமே அமைதியான தீர்வை காண முடியும். கஷ்மீரில் மனிதத்தன்மையற்ற ஊரடங்கை நிறுத்துமாறும் அம்மக்களின் ஜனநாயக உரிமைகளை மீண்டும் வழங்குமாறும் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு மத்திய அரசை கேட்டுக் கொண்டது.

Comments are closed.