GST க்கு கூடுதலாக வரி விதிக்கும் மாநிலங்கள். ஒரே நாடு, ஒரே வரி வெற்று கோஷம்?

0

மத்திய பாஜக அரசு வரி சீர்திருத்தம் என்கிற பெயரில் ஓரே நாடு ஓரே வரி என்கிற முழக்கத்துடன் GST வரியை அமலுக்கு கொண்டு வந்தது. ஏழை பாமரர்களுக்கு விரோதமானது என்றும் பணக்காரர்களுக்கு சாதகமானது என்று இந்த வரி விமர்சிக்கப்பட்ட வேலையில் தற்போது தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் தற்போதைய GST வரிக்கும் கூடுதலாக வரிகளை விதித்து மக்களின் சுமையை அதிகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது..

இத்தகைய கூடுதல் வரி விதிப்புகளை மத்திய அரசு அனுமதிப்பதோடு மொத்தவி யாபார சந்தை வரி, வாகன பதிவு வரி, கேளிக்கை வரி ஆகியவை GST க்கு கூடுதலாக மாநிலங்கள் விதித்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை, மகாராஷ்டிரா அரசு இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பதிவிற்கு ஒரு முறை செலுத்தப்பட வேண்டிய வரியை நான்கு சதவிகிதம் உயர்த்தியுள்ளது. இது GST அமலுக்கு வந்ததை தொடர்ந்து மாநில அரசிற்கு ஏற்பட்ட 600 இல் இருந்து 700 கோடி ரூபாய் இழப்பை ஈடு செய்ய விதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதே சமயம் இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மீதான வரி விதிப்பு அதிக பட்சமாக 20 லட்சம் வரை தான் விதிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது வாகனத்தின் மொத்த விலையில் 20% இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனத்தின் மீது விதிக்கப்பட்ட வரி 8-10 சதவிகிதத்தில் இருந்து தற்போது 10-12% உயர்த்தப்பட்டுள்ளது என்றும் பெட்ரோல் கார்களுக்கு 9-11% இருந்த வரி தற்போது 11-13% உயர்த்தப்பட்டுள்ளது என்றும் டீசல் கார்களுக்கு 11-13% இருந்த வரி 13-15% உயர்த்தப்பட்டுள்ளது என்று PTI  செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இது போன்றே CNG/LPG கார்களுக்கு 5-7% இருந்த வரியானது தற்போது 7-9% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் பொழுதுபோக்குத் துறையில் மத்திய அரசு வித்தித்த 28% GST க்கு கூடுதலாக மாநில அரசு 30% கேளிக்கை வரியை விதித்துள்ளது. இந்த இரட்டை வரியின் காரணமாக அண்டை மாநிலங்களை விட தமிழ்நாட்டில் திரைப்பட டிக்கட்களின் விலை உயர்வடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி விதிப்பினால் தாங்கள் தொழில் செய்ய முடியாது என்று கூறி தமிழ் திரையரங்கு உரிமையாளர்கள் விலை நிறுத்தத்தில் ஈடுபட்டுளளனர். மேலும் தமிழ் நாட்டில் திரைப்பட டிக்கட்களின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது என்பது குறிப்பித்தக்கது.

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய வருவாய் செயலாளர் ஹஸ்முக் அதியா, வாகன பதிவு கட்டணம், கேளிக்கை வரி மற்றும் முத்திரை வரி ஆகியவற்றை உயர்த்துவது மாநிலங்களின் உரிமை என்றும் மாநிலங்களுக்கு தடுக்கப்பட்டுள்ளவை பொருட்களின் நுழைவிர்க்கான வரி தான் என்றும் மாநிலங்களின் இந்த வரி விதிப்பை அது எப்படி இருந்த போதிலும் அதில் மத்திய அரசு தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.