GST இழப்பீட்டு நிதியில் சட்டத்தை மீறிய பாஜக அரசு -CAG அறிக்கையில் தகவல்

0

ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான செஸ் தொகையை, இந்திய தொகுப்பு நிதியில் வைத்து வேறு நோக்கங்களுக்காக மத்திய பாஜக அரசு பயன்படுத்தியுள்ளதாக  சிஏஜி தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான செஸ் தொகை ரூ.47,242 கோடியை 2017-18 மற்றும் 2018-19இல் இந்திய தொகுப்பு நிதியில் (CFI-consolidated fund of India) வைத்து பிற நோக்கங்களுக்காக அந்த தொகையைப் பயன்படுத்தியதாகவும், இதனால் மத்திய அரசே சட்டத்தை மீறியுள்ளதகாவும் இந்திய தலைமை தணிக்கைக் கணக்காளரான சிஏஜி அறிக்கையில் தெரிவித்துள்ளது. “இதன் மூலம் வருவாய் வரவுகளை அதிகப்படுத்தியும் நிதிப்பற்றாக்குறையை குறைத்தும் காட்ட முடிந்துள்ளது” என்று சிஏஜி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

செஸ் வசூல் மற்றும் இதை ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் நிதிக்கு சேர்ப்பதான அறிக்கைகள் 8,9, 13 ஆகியவற்றின் தகவலின் படி தணிக்கை ஆய்வு கண்டது. அதில் ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதிக்கு தொகையை சேர்ப்பதில் குறைபாடு இருந்துள்ளது. அதாவது 2017-18 மற்றும் 2018-19-ல் ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியில் சேர்க்கப்பட வேண்டிய ரூ.47, 272 கோடி சேர்க்கப்படவில்லை. இது ஜிஎஸ்டி இழப்பீடு சட்டம் 2017-ஐ மீறிய செயல், என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிதிகளின்படி ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் சட்டத்தின் படி, ஆண்டில் வசூல் செய்யப்பட்ட அனைத்து செஸ் வரி தொகையும் ஜிஎஸ்டி இழப்பீடு நிதியில் எவ்வித குறையும் இன்றி சேர்க்கப்பட வேண்டும். இது பொது கணக்கின் அங்கமாகும். இது மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி-யால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு இழப்பீடாக அளிக்கப்பட வேண்டிய தொகையாகும்.

சட்டத்தில் எதற்காக நிதியை பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதோ, அதற்கு பயன்படுத்தாமல் வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தியுள்ளது மத்திய அரசு. மேலும் இதனால் வருவாய் வரவை அதிகமாகவும், நிதிப்பற்றாக்குறையை குறைத்தும் காட்டுமாறு நேர்ந்துள்ளது. இவ்வாறு  தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.