“முஸ்லிமாக மாறுவேன்”- சமூக செயற்பாட்டாளர் ஹர்ஷ் மந்திர்!

0

சட்ட ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக நான் என்னை முஸ்லிமாக அறிவித்துக்கொண்டு அதன் விளைவுகள் பக்கம் மக்களை அழைப்பேன்- ஹர்ஷ் மந்திர்

டிசம்பர் மாதம் 11ம் தேதி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதா 2019 தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டது. குடியுரிமை திருத்த மசோதா ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் அல்லது வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆறு சமூகங்களான (இந்துக்கள், கிருஸ்துவர்கள்,புத்தர்கள், சீக்கியர்கள், பார்சிகள்,ஜைனர்கள் உள்ளிட்டவர்களுக்கு) 2014 டிசம்பர் 31 க்கு முன்பு வரை சட்ட விரோத குடியேறிகளாக இருந்திருந்தால் குடியுரிமை வழங்க வழி வகை செய்கிறது. மேலும் இந்த மசோதாவானது அவர்கள் குடியுரிமை பெறுவதற்கான சட்டரீதியான வழிகளை எளிதாக்குகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் மேற்சொன்ன நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறும் முஸ்லிம்களுக்கு மட்டும் இந்த சட்டத்தின் மூலம் சலுகைகள் பெற முடியாது. மேலும் முஸ்லிம்கள் தொடர்ந்து சட்டவிரோத குடியேறிகளாகவே கருதப்படுவர்.

குடியுரிமை திருத்த மசோதா என்பது சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் காணுவதற்காக கொண்டுவரப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (NRC) முன்னோடியாக பார்க்கப்படுவதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் அல்லாத பிற மதங்களை சார்ந்த சட்டவிரோத குடியேறிகளுக்கு இம்மசோதா குடியுரிமையை வழங்குகிறது எனில் மீதமிருக்கும் முஸ்லிம்கள்தான் இச்சட்டத்தின் மூலம் மிக மோசமாக பாதிக்கப்படப் போகிறார்கள்.

டிசம்பர் 10ம் தேதி மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதா அமல்படுத்தப்பட்ட பின் மனித உரிமை செயல்பாட்டாளர் ஹர்ஷ் மந்திர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறைகூவலை விடுத்தார்.

“ஒரு வேளை குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்படுமானால் இதுதான் எனது சட்ட ஒத்துழையாமை..,
முதலில் நான் அதிகாரப்பூர்வமாக என்னை முஸ்லிம் என பதிவு செய்து கொள்வேன்.
பின்னர் NRC க்காக அரசிடம் எனது எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க மாட்டேன். இறுதியாக ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை இழந்து தடுப்பு முகாம்கள் முஸ்லிம்கள் என்ன தண்டனை அனுபவிக்கிறார்களோ அதே தண்டனையை நானும் கோருவேன்.., இந்த சட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் நீங்களும் வந்து சேருங்கள். ” என்று எழுதியிருக்கிறார்.

அன்றைய நாளின் பிற்பகுதியில் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்
அபிமன்யு சந்திரா புதுடெல்லியில் ஹர்ஷ் மந்திரை சந்தித்தார். மந்திரின் இந்த அறிவிப்பிற்கு சமூகத்திடமிருந்து கிடைக்கும் பரந்த ஆதரவுக்கான சாத்தியம் குறித்தும், இதனால் மந்திர் எதிர் கொள்ளப் போகும் தனிப்பட்ட ஆபாச வசைபாடல் குறித்தும் இருவரும் விவாதித்தனர். குடியுரிமை திருத்த மசோதா என்பது வெறுமென சுதந்திரப் போராட்டம் மற்றும் அரசியல் அமைப்பின் விழுமியங்களை மட்டும் உடைக்கவில்லை.., மாறாக இந்திய நாகரிகத்தின் மரபுகளையும் சின்னாபின்னமாக்குகிறது. இந்திய நாகரிகம் எப்படிபட்டதெனில் வெவ்வேறு விதமான நம்பிக்கை மற்றும் அடையாளங்களை திருப்தியோடு வரவேற்ககூடியது. இந்த நெருக்கடியான தருணங்களில் பழைய இந்திய நாகரிக மரபு என்னை உறுதியோடு வைக்கும் என்று ஹர்ஷ் மந்திர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

அபிமன்யூ சந்திரா : சட்ட ஒத்துழையாமை எனும் கருத்து எவ்வளவு தூரம் முன்னோக்கி நகரும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? மேலும் இதன் மூலம் நீங்கள் முன்வைக்கும் பிரச்சனைக்கு தீர்வினை எட்ட முடியுமா.?

ஹர்ஷ் மந்திர் : ஒன்றை எதிர்ப்பதற்கான ஒரே வழி சட்ட ஒத்துழையாமை வடிவங்களில் இருந்துதான் பெற முடியும். நான் எனது ஒத்துழையாமை இயக்க வடிவத்தை மகாத்மா காந்தியிடமிருந்து கற்றுக் கொண்டேன். காந்தி நமக்கு கற்றுத் தந்தது என்னவெனில் அநியாயமான ஒரு சட்டம் வந்தால் முதலில் அதனை பகிரங்கமாக உடைக்க வேண்டும். பின்னர் அந்த சட்டத்தை ஏற்றுக் கொள்ளாது அதனால் கிடைக்கும் தண்டனைகளை கோர வேண்டும். அது வெறுமென நான் உங்கள் சட்டத்தை எதிர்க்கிறேன் என்று சொல்வதோடு நின்று போகக் கூடாது. அரசின் முன் தைரியமாக நின்று நான் உங்கள் சட்டத்தை பகிரங்கமாக மீறுகிறேன் , நீங்கள் அந்த சட்டத்தை நீக்கிவிடுங்கள் அல்லது என்னை தண்டியுங்கள் என்று கூறுவதாகும். நீங்கள் தண்டிக்காமல் இருக்க முடியாது அல்லது சட்டத்தை நீக்கவும் முடியாது இந்த கட்டமைப்பில் தான் போராட்டம் நடைபெற வேண்டும்.

இங்குள்ள பிரச்சினை என்னவெனில் மக்கள் பின்பற்றுவார்கள் என்று நான் நம்புகிற தேசிய அளவிலான சட்ட ஒத்துழையாமையின் மூலம் NRC ஐ புறக்கணிப்பதால் ஏற்படும் விளைவுகள் முஸ்லிம்களை மட்டுமே பாதிக்கும். இது ஒரு தேசிய அளவிலான NRC. ஒரு ஊகத்தின்படி அனைவரும் ஆவணங்களை திரட்டுகிறார்கள். ஒருவேளை உங்களால் ஆவணங்களை தயாரிக்க முடியாவிட்டாலும் நீங்கள் முஸ்லிமாக இல்லையெனில் அது உங்கள் குடியுரிமையை ஒருபோதும் பாதிக்காது என்பதை இந்த மசோதா உறுதியளிக்கிறது. எனவேதான் இது முஸ்லிம்களுக்கு மட்டுமேயான NRC.

ஒருவேளை முஸ்லிம் சமூகத்தினுள் நல்ல நிலையில் உள்ள ஆவணங்களை திரட்டுவதற்கு வசதி படைத்தவர்கள் ஆவணங்களை சமர்ப்பிப்பார்கள் எனில் அவர்கள் ஏழை எளிய ,கல்வியறிவற்ற முஸ்லிம் சகோதரி ,சகோதரிகளை தூக்கி எறிந்துவிடுகிறார்கள் என்றுதான் பொருள். ஏனெனில் ஏழை எளிய மக்களால் ஆவணங்களை திரட்ட முடியாதென அவர்களுக்கு தெரியும். அதனால் எனது வேண்டுகோள் என்னவெனில் முஸ்லிம் சமூகம் ஒட்டுமொத்தமாக NRC ஐ புறக்கணிக்க வேண்டும்.

ஆனால் ஒரு முஸ்லிம் அல்லாத எனக்கு NRC ஐ புறக்கணிப்பது எப்படி சட்ட ஒத்துழையாமை நடவடிக்கையாகும். எனவே நான் என்னை முஸ்லிமாக பதிவு செய்து பின் புறக்கணிப்பதுதான் சட்ட ஒத்துழையாமைக்கு வழிவகுக்கும்.

இப்போது உங்கள் மதம் எப்படி அரசால் பதிவு செய்யப்பட்டது..? மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது உங்களது சுய அறிவப்பால் தான் உங்கள் மதம் பதிவு செய்யப்படும். இஸ்லாத்திற்கு மாறுவதற்கு எனக்கு எந்த எண்ணமும் இல்லை. நான் அதிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறேன். நான் ஒரு சீக்கிய பெற்றோருக்கு பிறந்தவன். நான் எதார்த்தவாதி மற்றும் மனிதநேயவாதி. ஒவ்வொருவரது நம்பிக்கையையும் மதிக்கும் மனிதநேய தத்துவத்தை கொண்டிருப்பவன். நான் அதனை ஒருபோதும் கைவிடப் போவதில்லை.

நான் சொல்வது என்னவெனில் குடியுரிமையை அளிக்கவோ, மறுக்கவோ மதம் ஒரு மையப்புள்ளியாக இருக்குமெனில் அதிகாரப்பூர்வமான என்னை முஸ்லிம் என அறிவித்துக் கொண்டு இந்த நாட்டில் வசிக்கும் சக முஸ்லிம் எதிர் கொள்ளும் விளைவுகளை நானும் சந்திக்க தயாராக இருக்கிறேன். நான் NRC ஐ புறக்கணிப்பேன். எனவே எனது எந்த ஆவணங்களையும் நான் அரசுக்கு சமர்ப்பிக்கப் போவதில்லை. அதன் மூலம் அரசின் பார்வையில் நான் ஒரு சட்ட விரோத குடியேறி. இந்த சட்ட ஒத்துழையாமையின் மூலம் எனது நாட்டில் சக முஸ்லிம்கள் சந்திக்கும் இயலாமை மற்றும் சிரமங்கள், தடுப்பு காவல் முகாம்களுக்கு அனுப்பப்படுதல், குடியுரிமை இழப்பு போன்ற அனைத்தையும் எனக்கும் வழங்குங்கள் என கோரிக்கை விடுக்கிறேன்.

அபிமன்யூ சந்திரா: இதில் பலர் உங்களோடு இணைவார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா..?

ஹரீஷ் மந்திர் : நிச்சயமாக நம்புகிறேன்.
நாம் வெறுமென எண்களை கணக்கிட்டால் கூட மோடியின் சித்தாந்திற்கு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் மக்கள் வாக்களித்துள்ளார்கள். அறுபது சதவிகித இந்தியர்கள் அதில் கனிசமான அளவு இந்துக்கள் மோடியின் திட்டங்களை ஆதரிக்காதவர்கள்தான்.

எனது பிரச்சினை என்னவெனில் மார்டின் லூதர் கிங்கின் ” இறுதியாக நாம் நினைவில் வைத்துக் கொள்வது எதிரிகளின் வார்த்தைகளை அல்ல.., நண்பர்களின் மௌனத்தைத்தான்” கூற்றைப் போல்தான். பெரிய அளவிலான இந்து பெரும்பான்மையின் மௌனம்தான் இதைப் போன்ற தீமைகள் வடிவம் பெற உதவுகின்றன. இந்த மௌனத்தை உடைக்கத்தான் நாம் கூட்டாக சவால்விட வேண்டியிருக்கிறது.

இந்த மௌனத்திற்கு மூன்று காரணங்கள்தான் இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். ஒன்று தைரியமாக பேசுவதற்கு பயப்பட வேண்டும். இரண்டாவது “நான் முஸ்லிம் இல்லை என்பதால் எனக்கு கவலையில்லை, எனக்கு எதுவும் நடக்கப் போவதில்லை” . ஆனால் மூன்றாவது காரணம் என்னவெனில் அது என் மனதிலிருந்து வெளிப்படும் உணர்வுகளின் படி “வெறுப்பு மற்றும் பாரபட்சம்” ஆகும்.

எனவே இந்து சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான வேண்டுகோள் என்னவெனில் மௌனத்திற்கான மூன்று காரணங்களில் நீங்கள் எதில் இருக்கிறீர்கள் என்பதற்கான விடையை குறைந்தபட்சம் உங்களுக்குள்ளேயே சொல்லிக் கொள்ளுங்கள். இந்த மூன்று காரணங்களின் விளக்கங்கள் உங்களை திருப்திபடுத்துகிறதா..? அல்லது மனசாட்சியோடு ஒரு நிலைபாட்டை எடுக்கத் தூண்டுகிறதா.? என்பதை அவர்கள் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

அபிமன்யூ சந்திரா : மக்களின் மனசாட்சியை தூண்டுமளவுக்கு நாம் அவர்களிடம் நெருங்கியிருக்கிறோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா..?.

ஹர்ஷ் மந்திர் : குடியுரிமை திருத்த மசோதா என்பது வெறுமென சுதந்திரப் போராட்டம் மற்றும் அரசியல் அமைப்பின் விழுமியங்களை மட்டும் உடைக்கவில்லை.., மாறாக இந்திய நாகரிகத்தின் மரபுகளையும் சின்னாபின்னமாக்குகிறது. இந்திய நாகரிகம் எப்படிபட்டதெனில் வெவ்வேறு விதமான நம்பிக்கை மற்றும் அடையாளங்களை திருப்தியோடு வரவேற்ககூடியது. இந்த நெருக்கடியான தருணங்களில் பழைய இந்திய நாகரிக மரபு என்னை உறுதியோடு வைக்கும் என்று நான் நம்புகிறேன்.

அபிமன்யூ சந்திரா : டிவிட்டரில் உங்கள் அறிவிப்புக்கு பின் சில வெறுப்பூட்டும் பதில்கள் வந்திருந்ததை கண்டேனே..?

ஹர்ஷ் மந்திர் : நான் டிவிட்டரில் இந்த அறிவிப்பை வெளியிட்ட உடனேயே டிவிட்டர் பக்கம் கொந்தளிக்க ஆரம்பித்தது. நான் மின் அஞ்சல்களை பயன்படுத்துவதை வெறுக்க ஆரம்பித்தேன். ஆனால் அந்த மின்னஞ்சல்களில் உள்ள முஸ்லிம் வெறுப்பு, முஸ்லிம்களுக்கு எதிராக காட்டப்படும் பராபட்சத்தின் படிநிலைகள் குறித்து விரிவாக விளக்க வேண்டும். நான் மனிதனாக இருப்பதால் பெரும்பாலான வசைபாடல்கள் எல்லாமே பாலியல் ரீதியாகவே இருந்தமை எனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. விருத்தசேதனம் குறித்து, நான்கு மனைவிகள் குறித்து, முறையற்ற பாலுறவு குறித்து முஸ்லிம் விமர்சிக்கப்படுவதை கற்பனை செய்து பாருங்கள். ஒரு பெண் எவ்வாறு தொலைபேசி வாயிலாக பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாவாளோ அதுபோன்று ஒரு ஆணும் பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு உள்ளாவான் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. அதுவும் டிவிட்டரில் பதிவிட்ட நொடிப்பொழுதில்.

அபிமன்யூ சந்திரா : இதுபோன்ற பாலியல் ரீதியான பேச்சுக்கள் மற்றும் வெறுப்பு பதிவுகள் உங்கள் வந்தடைவது இதுதான் முதன்முறையா..?

ஹர்ஷ் மந்திர் : பெண்கள் இதற்கு பழகிவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ஆண்களுக்கு கொஞ்சம் அசாதாரணமானதுதான். 2002லிருந்தே எல்லா வகையான வெறுப்புகளுக்கும் எதிராக என்னை நானே தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் இந்த அளவுக்கு பாலியல் ரீதியான வெறுப்பை விதைக்கும் குருஞ்செய்திகளை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை.

அபிமன்யூ சந்திரா : CAB யின் ஆதரவாளர்கள் முஸ்லிம் சமூகத்தினுள் இருக்கிற பன்முகத்தன்மை குறித்து ஏன் மறந்து போனார்கள்..? அஹமதியாக்களும், ஷியாக்களும் ஒன்றுபட்ட முஸ்லிம் சமூகத்தின் ஒரு பகுதியென அவர்கள் நம்புகிறார்களா?

ஹர்ஷ் மந்திர் : இது ஒரு பெரிய பிரச்சினை. தேசிய மற்றும் சர்வதேச அளவில் தம்மை தாராளவாதிகள் என்று கருதுபவர்கள் கூட பெரும்பாலும் நம் மனதில் முஸ்லிம் சமூகத்தை ஒரு ஒரேமாதிரியான சமூகமாகத்தான் பார்க்கிறோம். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா ஒருமுறை. ” நான் முஸ்லிம் உலகத்திடம் பேசப் போகிறேன்” என்று சொன்னதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது எனக்கு விசித்திரமாக தோன்றியது. அவர் யாரைப்பற்றி பேசினார். உதாரணமாக நீங்கள் ஒருபோதும் “கிருஸ்தவ உலகத்தை” பற்றி பேச மாட்டீர்கள். ஏனெனில் தங்களை கிருஸ்துவர்களாக கருதும் மக்களிடையே வாழ்வதால் நீங்கள் அப்படி பேசமாட்டீர்கள. பல்வேறு நாடுகளில் வசிக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு மத்தியில் பன்முகத்தன்மையும் , வேறுபாடும் நிறைய இருக்கிறது.

ஆகவே விப்ரோவின் முன்னாள் தலைவரான அஜிம் பிரேம்ஜிக்கு இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் ஆகியோரோடு பொதுவான தொடர்பு இருக்கிறது. அது தர்காவில் கையேந்தி நிற்கும் முஸ்லிம் பக்கீரின் தொடர்பை விட முக்கியமானவை. ஆனால் இனவாத கண்ணோட்டம் அவரை நாராயண மூர்த்தியோடு தொடர்புபடுத்துவதை விட அந்த பக்கீரோடு தொடர்புபடுத்துவதைத்தான் விரும்புகிறது. நாம் அனைவரும் அத்தகைய அடையாளங்களின் கலவையாகும். இந்த அடையாளங்களில் ஒன்றிற்கு சலுகை அளிப்பதின் வழியாக வக்குப்புவாத அரசியல் அணிதிரட்டல் கட்டமைக்கப்படுகிறது.

அபிமன்யூ சந்திரா: உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தாங்கள் எடுத்த முடிவிற்கான பதில்களை பெற்றீர்களா..? நிச்சயமாக சட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் இது ஒரு மிகப்பெரிய முயற்சியாகும்.

ஹர்ஷ் மந்திர் : உடனடியாக எனது குடும்பம் ஆதரவளித்தது. எப்போதும் ஆதரவாகவே இருந்து வந்துள்ளது. அவர்கள் அனைவரும் இதனால் ஏற்படப் போகும் விளைவுகளை அங்கீகரிக்கிறார்கள். ஒருவேளை பின் விளைவுகள் இல்லாமல் எதிர்ப்பு போரட்டத்தை நடத்த முடிந்தால் நாம் அனைவரும் அதனைச் செய்வோம். ஆனாலும் எல்லாவற்றிற்கும் நான் தயாராகவே இருக்கின்றேன்.

நன்றி: The Caravan
தமிழில்: அகமது யஹ்யா அய்யாஷ்

Comments are closed.