மதவாதத்தை வளர்க்கும் பா.ஜ.க. ஆதரவு குழுக்கள்!

0

CAA பிறகு பாஜக வின் ஆதரவு வாட்சப் குழுக்கள் மதவாத பதற்றத்தை வளர்க்கின்றன.

உள்துறை அமைச்சரான அமித்ஷா கடந்த வாரம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்கியிருக்கிறார். பாராளுமன்றத்தில் பேசும் போது இது முஸ்லிம்களை குறிவைக்கிறது என்ற குற்றசாட்டை மறுத்து முஸ்லிம்களிடம் நீங்கள் பயப்படத் தேவையில்லை எனவும் கேட்டுக் கொண்டார்.

இதற்கு வலுசேர்க்கும் விதமாக எதிர்கட்சி தலைவரின் கருத்துக்கு பதிலளித்த அமித்ஷா “நீங்கள் விரும்பினாலும் இந்த நாடு முஸ்லிம்களிடம் இருந்து விடுபடாது ” என்றார்.

இந்த மாயத்திலிருந்து வெளியேறி இந்தியாவின் வாட்சப் இணைப்புகளுக்குள் நுழைந்தால் பெரும்பாலும் அவை நேரடியாகவோ., மறைமுகமாகவோ பாஜக வின் இணைய அணி அல்லது, ஆதரவு அமைப்புகளினால் நடத்தப்படுகிறது. அதில் பகிரப்படுகிற செய்திகள் அமித்ஷாவின் கூற்றுக்கு நேர் எதிரானது. அவை தெளிவாக CAA என்பது இந்து ராஷ்ட்ராவை அமைப்பதற்கான முக்கியமான திட்டம் எனவும், இந்த சட்டம் முஸ்லிம்களை இந்தியாவை விட்டும் வெளியேற்றும் ஆயுதம் எனவும் பேசுகிறது.

கடந்த ஒரு வார காலமாக இந்த வாட்சப் குழுக்கள் இஸ்லாமோபோபியா மற்றும் புலம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை தூண்டுவதற்கு ஒருங்கிணைந்த அமைப்பாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதென விசாரணையில் தெரியவந்துள்ளது. அமித்ஷா பொதுவான பேச்சுக்கு மாறாக இந்த குழுக்களில் “CAA வின் மூலம் இந்தியாவிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றவும், பெருமுயற்சி இல்லாமல் முஸ்லிம்களின் மக்கள் தொகையை பாதியாக குறைப்பதற்கும் இது கருவியாக பயன்படும் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வாட்சப் குழுக்கள் சரிபார்க்கப்படாத புள்ளிவிவரங்கள் மற்றும் வாட்சப் குழுக்களின் மூலம் முஸ்லிம் சமூகத்தை கொடூரமாக சித்தரிக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுவதற்கு அழைப்பு விடுக்கின்றனர். NRC யின் பட்டியலில் இருந்து முஸ்லிம்கள் விலக்கப்படும்பொழுது இவர்கள் கொண்டாடுகின்றனர். எதிர்கட்சிகளை இந்துக்களுக்கு எதிரானவர்கள் என சித்திரித்தே மோடி, அமித்ஷா மற்றும் பாஜக வுக்கு வாழ்த்து செய்திகளுடன் வாட்சப் குழுக்கள் செயல்படுகின்றன.

இந்த குழுக்களின் சுயவிவரம்..?

கடந்த ஒருவாரமாக பாஜக அனுதாபிகள் மற்றும் பாஜக தலைவர்களின் உதவியாளர்களால் நேரடியாக நடத்தப்படும் குறைந்தது பத்து அரசியல் சார்ந்த வாட்சப் குழுக்களை கட்டுரையின் ஆசிரியரால் அணுகப்பட்டது. அவை பெரும்பாலும் பிரதமர் மோடியின் புகைப்படத்துடனோ அல்லது அவரது பெயருடனோ இயங்குகின்றன. மேலும் பாஜக அல்லது அதன் துணை அமைப்புகளின் பெயரில் இயங்குகின்றன. அவை அனைத்தும் அந்தந்த பகுதியின் நிர்வாகியால் பகுதியின் பெயரை சேர்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களது உண்மையான பெயர்களை ஆசிரியரின் அணுகுமுறையை கவனத்தில் கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

அந்த வாட்சப் குழுக்களில் ஒன்று இந்த குழுவின் மூலம் பிரதமரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என கூறுகிறது. அந்தக் குழுவின் நிலைத் தகவலில் (Description) இந்த குழு பிரதமரின் நேரடி உதவியாளர்களால் கண்காணிக்கபடுகிறது எனவும் நமது குழுக்களின் உணர்வுகளை அவர் பிரதமரிடம் தெரிவிப்பார் எனவும் கூறுகிறது. இந்த குழு குறித்த மேலதிக விபரங்களை திவயர் இணையத்தால் கூடுதலாக சரிபார்க்க முடியவில்லை. இந்த குழுக்களில் செய்திகள், மீம்ஸ், காணொளிகள், படங்கள் போன்றவை பகிரப்படுகின்றன. ஏதொவொரு பெரிய விடயம் அல்லது பேசு பொருள் இருந்தால் மட்டுமே உரையாடல் நிகழ்கிறது. CAB இரு அவைகளிலும் அமல்படுத்தப்பட்ட செய்தி விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பெயரில் “ஜெய் ஸ்ரீராம்” எனும் வாசகங்களோடு சிலரால் பகிரப்பட்டது.

இந்து ராஷ்ட்ராவிற்கான நான்கு படிகள்..

வாட்சப் குழுக்களில் பெரும்பாலான செய்திகள் ஒரு முக்கியமான கருப் பொருளை முன்வைத்து பரப்பப்பட்டது அது என்னவெனில் CAA வை கொண்டு வருவதின் மூலம் NRC யால் முஸ்லிம்கள் குடியுரிமை இழந்து முஸ்லிம்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்படும். இந்த செய்திகளை கவனிக்கும் பொழுது இந்தியாவின் பயணம் இந்து ராஷ்ட்ராவை நோக்கி நகர்கிறதோ என சந்தேகம் எழும்பியது. அந்த செய்திகளும் எப்படி சாத்தியமாகும் என்பதை நான்கு படிகளாக விவரிக்கிறது.

இந்தியாவை ஒரு இந்து ராஷ்ட்ராவாக மாற்றுவதற்கு நான்கு படிகளை அவர்கள் பட்டியலிடுகிறார்கள். ஒன்று CAB யில் தொடங்கி இரண்டாவதாக NRC தொடர்ந்து மூன்றாவதாக மக்கள் தொகையை கட்டுப்படுத்தி கடைசியாக அனைவருக்குமான சிவில் சட்டத்தினை (UCC) அமல்படுத்துவதின் மூலம் இந்து ராஷ்ட்ரா பூரணமடையும் என்கின்றனர். வாட்சப் குழுக்களில் அவர்கள் பயன்படுத்தும் மொழி அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்பை கொண்டிருக்கிறது. NRC குறித்து அவர்கள் பேசும்பொழுது “முஸ்லிம்களை NRC யின் மூலம் சரிபார்த்து தூக்கிற எறிய வேண்டும்” என்று தலைப்பிடப்படுகிறது. முஸ்லிம்களின் மக்கள் தொகை குறித்து “பன்றிகளின் இனப்பெருக்கம் இனிமேல் இல்லை” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரமற்ற புள்ளிவிவரங்கள் மற்றும் சந்தேகமான தரவுகளை பகிர்வதின் மூலம் அவர்களது இஸ்லாமோபோபியா நியாயப்படுத்தப்படுகிறது. ஒரு குழுவில் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு “பெரிய சுமை”என்று செய்தி பரப்பப்பட்டு சில போலியான புள்ளி விவரங்களும் அதோடு இணைக்கப்படுகிறது. உதாரணமாக முஸ்லிம்களில் 45% பேர் நோயாளிகளாக அரசு மருத்துவமனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அரசு மருத்துவமனை அப்படி ஒரு மத ரீதியான தரவுகளை நிச்சயமாக வைத்துக் கொள்ளப் போவதில்லை. அடுத்ததாக முஸ்லிம்களில் 32℅ பேர் சிறையை ஆக்கிரமித்துள்ளனர் என்று அதில் சொல்லப்படுகிறது. உண்மையில் முஸ்லிம்களில் 15% நபர்களே சிறைவாசிகளாக உள்ளனர். அடுத்ததாக இந்தியாவில் அதிக குற்றசாட்டுகளில் ஈடுபடுவோரில் 44% பேர் முஸ்லிம்கள் என பரப்ப்படுகிறது. உண்மையில் தேசிய குற்றப் பதிவு ஆணையம் இப்படியான மதரீதியான ஆவணங்களை இதுவரை வெளியிடவே இல்லை. இவையெல்லாம் இட்டுக்கட்டப்பட்ட தரவுகள்.

வாட்சப் குழுக்களால் பரப்பப்படுகிற கூற்றுகள் நம்ப முடியாத புள்ளி விவரங்களை முன்வைக்கிறது. 1% முஸ்லிம்கள் தான் இந்தியாவுக்கு ஆதரவான முழக்கங்களை முன்வைக்கின்றன. 95% முஸ்லிம்கள் இந்தியாவுக்கு எதிராகத்தான் முழக்கமிடுகிறார்கள் என்று பரப்பப்படுகின்றது. அல்லது முஸ்லிம் சமூகத்தில் 67% பேர் பஞ்சர்களை சரிசெய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் பரப்பப்படுகின்றன.

அந்த குழுக்களால் பரப்பப்படும் செய்திகள், மீம்ஸ்கள் மற்றும் பயன்படுத்துகிற தரவுகள் முஸ்லிம்கள் இல்லாத இந்தியா தான் நமது நாட்டிற்கு பயன் தரும் என்பதை முன்வைக்கின்றன. ஒரு மீம் முஸ்லிம்களின் புதைகுழிகளால் ஆக்கிரமிக்கப்படும் நிலம், பற்றியும் அந்த நிலத்தில் மரத்தினை நடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றிய கணக்குகளைப் பற்றி பேசுகிறது.

அடுத்த முக்கியமான செய்தி என்னவெனில் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான கோபத்தினையும் , வன்முறையையும் தூண்டுவதற்காக முஸ்லிம்கள் இந்தியாவிற்கு எதிராக போர் செய்து இந்தியாவை கைப்பற்ற சதி செய்வதாகவும் பரப்புகின்றனர். இந்த மீம்ஸ்கள் இந்துக்கள் எண்ணிக்கை 78% மாக குறைந்துள்ளதாகவும், முஸ்லிம்கள் 23% மாக அதிகமாகிவிட்டனர் எனும் பொய்யான புள்ளிவிவரங்கள் சொல்கிறது. ஆனால் உண்மையில் 2011ம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்துக்கள் 96.7% மற்றும் முஸ்லிம்கள் 17.6% எனவும் கூறுகிறது. இதுபோன்ற பதிவுகள் இந்தியாவுக்கு எதிராக முஸ்லிம்கள் போர் தொடுக்க தயாராக உள்ளதாகவும் அதனால் தான் CAA அமல்படுத்தினால் அத்தகைய திட்டம் முறியடிக்கப்படும் எனவும் தூண்டப்படுகிறது.

இந்த வாட்சப் தகவலின் மற்றொரு செய்தி என்னவெனில் CAA விற்கு எதிரான எதிர்ப்புகள் ஜிஹாதிகளுக்கும், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்குமே பயன் தருவதாகவும் இது இந்துக்களுக்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபாஷ் பாஜக..

அனைத்து வாட்சப் குழுக்களிலும் பரப்பப்படுகிற பொதுவான செய்தி என்னவெனில் ” இந்து அகதிகளை அனுமதிக்க மறுத்து ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகளின் குடியுரிமைக்கு அனுமதிக்க கோருகிற காங்கிரஸை இந்துக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் ” என்கிறது. இந்த குழுக்கள் பாஜக தான் இந்துக்களுக்காக உண்மையாக போராடுவதாக சொல்கிறது. “பாஜக மற்றும் NDA மட்டும் தான் ஜிஹாதிகளாலும், எதிர்கட்சியாலும் துன்புறுத்தப்படுகிற இந்துக்களுக்கு ஆதரவாக நிற்கிறது. பாஜக மட்டும்தான் இந்து அகதிகளை பாதுகாக்கிறது.

உண்மையில் குறைந்தது நான்கு குழுக்களிலாவது ராகுல் காந்தியின் படம் அடங்கிய ஒரு மீம்ஸ் காணப்பட்டது. அந்த மீம்ஸ் ராகுல் காந்தி சொன்னதாக ஒரு தவறான மேற்கோளுடன் பரப்பப்பட்டுள்ளது. அதில் ராகுல் காந்தி
“தான் இந்தியாவை இந்து ராஷ்ட்ராவாக மாற்ற விரும்பவில்லை எனவும், ஏனெனில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் இந்தியாவை இஸ்லாமிய தேசமாக மாற்றத்தான் விருப்பம் ” என்பதுபோல அந்த டீவிட் அடங்கிய மீம்ஸ் பரப்பப்பட்டுள்ளது.

இந்த செய்தி பாஜக விற்கு எதிரான வாக்காளர்களுக்கு பகிரப்பட்டு எதிர்க் கட்சிகளுக்கு வாக்களிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. “உங்கள் ஓட்டின் காரணமாகத்தான் இந்த எதிர்கட்சி எம்பிக்கள் ஜிஹாதிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தருகின்றனர். பாஜக மட்டுமே இந்துக்களுக்கு ஒரு பாறையாக நிற்கிறது. முட்டாள்தனமான இந்துஸ்தானியர்களே உங்கள் சொந்தம்..யார்..? உங்கள் எதிரி யார் என்பதை இப்பொழுதாவது புரிந்துகொள்ளுங்கள்..” என்ற வாசகம் அடங்கிய செய்தி “சபாஷ் பாஜக” என்று முடிவடைகிறது.

உண்மையில் பல செய்திகள் வாக்காளர்களை பொருளாதாரம், வேலை வாய்ப்பு போன்ற எதைப்பற்றியும் கருத்தில் கொள்ளாமல் பாஜக வை ஆதரிக்கவும் என்று கேட்டுக் கொள்ளும்படியாக இருந்தது.

வாட்சப் மற்றும் இந்தியா

இந்தியாவில் புழங்கும் அபரிமிதமான வாட்சப் கணக்காளரிடம் இதைப்போன்ற முறையான திட்டமிடப்பட்ட செய்திகள் ஆபத்தை ஏற்படுத்தும். 400மில்லியன் பயனாளர்களை கொண்ட மிகப்பெரிய சந்தையை இந்தியாவில் வாட்சப் கொண்டிருக்கிறது. 2017 ம் ஆண்டின் கணக்கின்படி இந்தியாவில் 468 மில்லியன் ஸ்மார்ட் பயனர்கள் இருந்தனர். அதாவது 85% ஸ்மார்ட்போன் பயனர்கள் வாட்சப் பயன்படுத்துகின்றனர்.

வாட்சப்பில் பெரும்பாலும் தவறான தகவல்களினால் ஆபத்தான மற்றும் அபாயகரமான நிகழ்வுகள் நடந்துவிடுகின்றன. உதாரணமாக குழந்தை கடத்தல்காரர்கள் என வாட்சப்பில் பரப்பப்பட்ட வதந்திகளால் உந்தப்பட்டு கும்பல் கொலைகாரர்களால் 25பேர் இறந்துள்ளனர்.

வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவதில் பாஜக திறமையுடனும் முதலிடத்திலும் இருக்கிறது. கடந்த கால மக்களவைத் தேர்தல்களில் இந்தியா முழுக்க இருக்கிற 9,20,000 வாக்குச் சாவடிகளுக்கு 9,00,000 செல்போன் பயன்படுத்துகிற பிரமுகர்களை பயன்படுத்தியது. இவர்களது வேலை வாக்குச் சாவடிகளில் உள்ள வாக்காளர் குடும்பங்களை வாட்சப் குழுக்கள் மூலம் இணைத்து தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவதுதான்.

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் நடத்திய ஆய்வு பாஜக வின் முயற்சிகளுக்கு பின்னால் உள்ள காரணங்களை விளக்குகிறது. அந்த ஆய்வில் மக்கள் கல்வியறிவு போதாமை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் போதாமையால் செய்திகளின் தரத்தை சரிபார்ப்பதில்லை என்பதை விட மக்கள் தங்களது முன்முடிவு மற்றும் சித்தாந்தப் பின் புலத்தின் காரணமாக பொய்யான தகவல்களை பரிமாற விரும்புகின்றனர் என்பது தான் உண்மை என்கிறது.

வதந்திகள் சரியான நேரத்தில் அதி வேகமாக பரவுவதாகவும் இந்து ஆய்வு கூறுகிறது. தேர்தல்களின் போது, எல்லை தாண்டிய இராணுவ நடவடிக்கைகளின் போது உணர்வுப் பூர்வமான தருணங்களின் போது இவை தீவிரத்தன்மை அடைந்து தவறான தகவல்கள் மற்றும் பொய் பிரச்சாரம் இன்னும் வேகமாக பரவத் தொடங்குகின்றது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் இந்திய துணை இராணுவப் படையினர் மீது தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நிகழ்த்தினர். இந்த தாக்குதலுக்கு பிறகு இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் வாட்சப் தகவல்களின் மூலம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்த செய்திகள் முஸ்லிம்களுக்கு எதிராக கோபத்தை தூண்டியது., அதிலும் குறிப்பாக கஷ்மீர் முஸ்லிம்கள் மீது தூண்டப்பட்டு அவர்கள் போர் பிரகடணம் விதிக்கும்படியான சூழலை உண்டாக்குகிறது. இதன் பின்னர் தேசம் முழுக்க இருக்கிற கஷ்மீரி மாணவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டு குடியிருந்த வாடகை வீடுகளை விட்டும் துரத்தப்பட்டனர்.

நன்றி: The Wire
தமிழில்: அகமது யஹ்யா அய்யாஷ்

Comments are closed.