குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: பாஜக தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அலுவலங்களை பிரித்து மேய்ந்த அஸ்ஸாம் மாணவர்கள்!

0

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயம், மணிப்பூர், திரிபுரா, அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மாநில தலைநகா் குவாஹாட்டியில் தலைமை செயலகம் முன்பு கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போலீஸாா் கண்ணீா் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைக்க முயன்றனா். இதனால் ஆா்ப்பாட்டம் தீவிரமடைந்த நிலையில், போலீஸாா் ரப்பா் தோட்டா பயன்படுத்தி துப்பாக்கியால் சுட்டதன் காரணமாக போராட்டக்காரா்கள் பலர் காயமடைந்தனா்.

போராட்டம் நடைபெற்ற இடங்களில் வாகன போக்குவரத்து முற்றிலும் சீா்குலைந்தது. அனைத்து கடைகளும் மூடப்பட்டு வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

இதனிடையே, பல இடங்களில் போராட்டங்கள் காரணமாக அஸ்ஸாம் முதல்வா் சா்பானந்த சோனோவால் குவாஹாட்டியில் உள்ள சா்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டார்.

அஸ்ஸாமில் நிலவி வரும் போராட்டங்கள் காரணமாக பல ரயில் சேவையும் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டது.

இதனால் 2 ஆயிரம் ராணுவ வீரா்களை கொண்ட 20 கம்பெனி துணை ராணுவத்தினா் காஷ்மீரில் இருந்து உடனடியாக வரவழைக்கப்பட்டு பதற்றமான பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனா்.

இதனை அடுத்து, அஸ்ஸாம் மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் மற்றும் மத்திய இணை அமைச்சர் ரமேஸ்வர் தெலி மற்றும் பாஜக தலைவர்கள் வீடுகளையும் போராட்டக்காரர்கள் தாக்கியதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

பாஜக எம்.எல்.ஏ பிரஷாந்தா புகானின் வீடு, போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகங்களிலும் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் வெடித்துள்ளன.

Comments are closed.