ஜம்மு கஷ்மிர் விவகாரம்: ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்

0

ஜம்மு கஷ்மிரில் விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்தும் மத்திய அரசின் செயல்பாடுகளில் உடன்பாடு இல்லை என்பதாலும், ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்த அதிகாரிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜம்மு கஷ்மிரில் அரசானை சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அங்கு கடும் கட்டுப்பாடுகளும், பல தடைகளையும் விதித்தது. இதனால் கஷ்மிர் மக்களுக்கு அடிப்படை உரிமைகள், சுதந்திரம் ஆகியவை மறுக்கப்பட்டதால், அருணாசலப் பிரதேசம்-கோவா-மிஸோரம் மற்றும் யூனியன் பிரதேச பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரி கோபிநாதன் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பி வைத்தாா். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து 15 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு கோபிநாதனுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து அந்த நோட்டீஸில், கோபிநாதன் குறிப்பிட்டுள்ளதாவது:

அரசு திட்டங்கள் மற்றும் விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் அதிகாரமின்றி பேசியது மற்றும் மற்ற அமைப்புகளுடனான மத்திய அரசின் உறவு குறித்து விமா்சித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் என் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்கான விசாரணையை மத்திய அரசு தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

கோபிநாதனின் ராஜிநாமா கடிதம் பரிசீலனையில் இருப்பதாகவும், இது குறித்த முடிவு நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், 15 நாள்களுக்குள் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவா் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Comments are closed.