IIT மெட்ராஸில் வெறுப்புப் பேச்சுக்களை பேசிய மேஜர் ஜெனெரல் பக்ஷி

0

IIT மெட்ராஸில் நிகழ்ச்சி ஒன்றில் மேஜர் ஜெனெரல் பக்ஷி ஆற்றிய உரை வெறுப்புப் பேச்சுகளாலும் வன்முறையை தூண்டும் விதமாகவும் அமைத்திருந்தது என்று அபினவ் சூர்யா என்கிற மாணவர் குற்றம் சாட்டியுள்ளார். இவர் மேஜர் ஜெனெரல் பக்ஷியின் உரைக்கான தனது எதிர்ப்பை கடிதம் மூலம் IIT இயக்குனருக்கு அனுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், “இத்தகைய வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் பேச்சுக்களை மாணவர்கள் மத்தியில் பேசுவதற்கு IIT ஒரு தளம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பதை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அந்த பேச்சு, பகையை தூண்டுவதாகவும், மனிதநேயமற்றதாகவும், கொடுமைகளை போற்றுவதாகவும் அமைந்திருந்தது” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் பக்ஷியின் பேச்சுக்கள் பாகிஸ்தானிற்கு எதிரான பகைமையை தூண்டுவதாகவும் பகுத்தறிவற்ற தேசியவாதத்தை போற்றுவதாகவும் அமைந்திருந்தது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் பேச்சில் உள்ள வெறுப்புகளின் அளவு எல்லைகளை தாண்டி இருந்தது என்று அபினவ் சூர்யா கூறியுள்ளார்.

“எங்களது தலைமுறை பாகிஸ்தானை இரண்டாக பிளந்தோம், உங்களுடைய தலைமுறை அதனை நான்காக பிளக்க வேண்டும். அப்போது தான் நாம் நிம்மதியாக வாழ முடியும்” என்று பக்ஷி கூறியதாகவும் மேலும் அணு ஆயுத பயன்பாடுகளை நியாயப்படுத்தி பக்ஷி பேசியதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தை கொச்சைப் படுத்தி பக்ஷி பேசியதாகவும் சூர்யா தனது கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், இந்திய ராணுவத்தில் உள்ளவர்கள் தான் விடுதலை பெற்றுத்தந்ததாகவும் அஹிம்சை என்று மற்றவர்கள் செய்தது எல்லாம் மடத்தனம் என்றும் அவர் கூறியதாக மாணவர் சூர்யா குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய சுதந்திரம் என்பது 2014 இல் மோடி இந்திய பிரதமர் ஆன போது தான் என்று பக்ஷி தனது உரையில் கூறியுள்ளார்.

இந்த அனைத்து பேச்சுக்களையும் சிறப்பு சுதந்திர தின உரை என்கிற பெயரில் IIT மெட்ராஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது அந்த நிறுவனத்திற்கே அவமானம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று IIT மெட்ராஸ் இயக்குனருக்கு அவர் வேண்டுகோள் விடுத்து தனது கடிதத்தை முடித்துள்ளார்.

தனக்கு எந்தவித அரசியில் நிலைபாடுகளும் இல்லை என்றும் இதற்கு முன்னர் நடந்த எந்த ஒரு உரைக்கும் தான் மறுப்போ எதிர்கருத்தோ தெரிவித்ததில்லை என்றும் ஆனால் தற்போதுள்ள பக்ஷியின் உரையினை வெறும் உரையாக கருதி விட முடியாது என்றும் அது மிக ஆபத்தான் வெறுப்புப் பேச்சு என்று சூர்யா கூறியுள்ளார்.

வெறுப்புப் பேச்சுகளோடு நில்லாமல் வரலாற்றை சிதைக்கும் கருத்துக்களையும் பக்ஷி தனது உரையில் கூரியுள்ளதாக தெரிகிறது. தெஹ்ராடுன் முன்னதாக தெஹ்ராதுரோன் என்று அழைக்கப்பட்டதாகவும் அங்கு துரோனாச்சாரியாவின் படைகள் தங்கி இருந்ததனால் அது அவ்வாறு அழைக்கப்பட்டது என்றும் தற்பொழுது அந்த இடத்தில் இந்திய இராணுவ அகாடமி உருவாகியுள்ளது என்றும் அவர் கூறியதாகத் தெரிகிறது.

பக்ஷி கஷ்மீர் மக்கள் மீது பெல்லட் குண்டுகளின் பிரயோகத்தை நியாப்படுத்திய போது பல மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வன்னம் அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களாக பக்ஷி போன்ற அடிப்படைவாத சிந்தனை கொண்ட பலர் IIT க்கு அழைக்கப்பட்டு உரையாற்ற வைக்கப்பட்டுள்ளனர். இதனை IIT யின் பல ஆசிரியர்கள் ஆதரிக்கின்றனர் என்றும் ஊக்குவிக்கின்றனர் என்றும் மாணவர் சூர்யா தெரிவித்துள்ளார். IIT மெட்ராசில் ஆர்.எஸ்.எஸ். இன் அறிவுசார் சாகா நடைபெற்று வருகிறது என்றும் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் பட வேண்டும் என்றும் அபினவ் சூர்யா தெரிவித்துள்ளார்.

IIT மெட்ராசில் வலது சாரி இயக்கங்களின் கருத்துக்கள் பரப்பப்படுவதற்கு எதிர்ப்புகள் வருவது இது முதன் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.