காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து குலாம் நபி ஆசாத் நீக்கப்பட்டள்ளார்.
இதேபோல், கட்சியின் பொறுப்பாளர் பதவியில் இருந்து அனுகிரக நாராயண் சிங், ஆஷா குமாரி, கௌரவ் கோகோய், ராமச்சந்திர குந்தியா ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், கட்சிபணிகளில் தலைமைக்கு உதவி செய்வதற்கு புதிய குழு அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி விருப்பம் தெரிவித்தார். கட்சியின் மைய தேர்தல் ஆணையக் குழுவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரத் தலைவரை நியமிக்க வேண்டும் என்று சில மாதங்களாக வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.