மத்திய பிரதேசத்தில் 1500 நபர்களுக்கு விருந்து வைத்தவருக்கு கொரோனா பாதிப்பு!

0

மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் துபாயிலிருந்து திரும்பியவருக்கும், அவரது குடும்பத்தினர் 11 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

இதனிடையே, அவர், தனது தாயார் உயிரிழந்ததன் நினைவாக 1,500 பேருக்கு உணவு விருந்து அளித்துள்ளார்.
விருந்துளித்த பகுதியில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க மொத்த பகுதிக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

துபாயில் பணிபுரிந்து வருபவர் சுரேஷ், இவர் கடந்த மார்ச் 17ஆம் தேதி சொந்த ஊர் திரும்பியுள்ளார். தனது தாயின் நினைவு தினத்திற்காக மார்ச் 20ஆம் தேதி 1,500 பேருக்கு விருந்தளித்துள்ளார். பின்னர், சுரேஷூக்கு மார்ச் 25ஆம் தேதி கொரோனா அறிகுறி இருந்துள்ளது.

இதையடுத்து, 4 நாட்கள் பிறகு அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரும், அவரது மனைவியும் தனிமைப்படுத்தப்பட்டனர். 

தொடர்ந்து, அவரது உறவினர் 23 பேரிடம் அதிகாரிகள் கொரோனா பரிசோதனை நடத்தினர். அதில், 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மொரேனா தலைமை மருத்துவ அதிகாரி பாந்தில் கூறும்போது, “கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 2 பேருடன் தொடர்பில் இருந்த 23 பேரில் 8 பெண்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு இல்லாதவர்களும், 14 நாட்கள் தங்களது வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.

Comments are closed.