இந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைகழகமாக ஜாமியா மிலியா தேர்வு

0

2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வித்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.

இதில், டெல்லியிலுள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் நாட்டின் மிகச்சிறந்த பல்கலைக்கழகமாக வந்துள்ளது. 90 சதவிகித மதிப்பெண்களுடன் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. யுஜி, பிஜி, பிஎச்டி மற்றும் எம்பில் படிப்புகளில் ஒவ்வொரு ஆண்டும் சேர்க்கைபெறும் மாணவர் எண்ணிக்கை, மாணவியரின் விகிதம், பாலின சமத்துவம், பிற மாநிலம் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுடனான இணக்கம், மாணவ – மாணவியரின் பன்முகத்தன்மை என பல பிரிவுகளில் ஜாமியா மிலியா பல்கலைகழகம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கு முன்பு வெளியான தேசிய கல்வி நிலைய தரவரிசை பட்டியலில், ஜாமியா மிலியா பல்கலைகழகம் 12 ஆம் இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது.

மத பாகுபாட்டுடன் கூடிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள், கடந்த டிசம்பர் மாதம் அமைதி வழிபோராட்டத்தை முன்னெடுத்தனர். அப்போது, டெல்லி காவல்துறையினரும், சங்பரிவார குண்டர்களும் பல்கலைக்கழகத்திற்கு உள்புகுந்து வன்முறை வெறியாட்டம் நடத்தினர்.

பல்கலைக்கழக கட்டடங்கள், நூலகங்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர். இதில் பாதிக்குப்புள்ளான மாணவ- மாணவியரை கைது செய்து சிறையில் அடைத்ததுடன், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் தீவிரவாதிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது, பாஜகவினர் பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.

தற்போது அப்பல்கலைக்கழகம்தான் முதல் இடத்தில் வந்துள்ளது. அருணாசலப் பிரதேசத்தில் உள்ள ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம் 83 சதவிகித மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 82 சதவிகித மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும், உ.பி.யிலுள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் 78 சதவிகித மதிப்பெண்களுடன் நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.

Comments are closed.