தேசிய ஊரடங்கு காரணமாக 338 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஹரியாணாவில் உள்ள ‘ஜிண்டால் குளோபல் ஸ்கூல் ஆஃப் லா’ உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆய்வில் கூறியிருப்பதாவது: மார்ச் 19 முதல் மே 2 வரை ஊரடங்கு தாக்கத்தால் 338 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் 80 பேர் தனிமையால் ஏற்பட்ட விரக்தி, கொரோனா பாதிப்பு அச்சம் காரணமாக தற்கொலை செய்துள்ளனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊரை நோக்கி நடந்து சென்றபோது 51 பேர் உயிரிழந்துவிட்டனர்.
மது கிடைக்காததால், போதைக்காக வேறு விஷப் பொருள்களை சாப்பிடுவது உள்ளிட்ட நிகழ்வுகளில் 45 பேரும், பட்டினி, நிதி நெருக்கடி சிக்கலால் 36 பேரும் உயிரிழந்துவிட்டனர்.
ஊரடங்கு காலத்தில் காவல்துறை எடுத்த நடவடிக்கை, வன்முறையில் 11 பேரும், ஊரடங்கு தொடர்பான குற்ற நிகழ்வுகளில் 12 பேரும், ஊரடங்கால் மருத்துவ வசதி கிடைக்காமல் போன்ற காரணத்தால் 38 பேரும் உயிரிழந்துள்ளனர். இது தவிர மேலும் 41 பேரின் உயிரிழப்புக்கான சரியான காரணம் உறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.