இந்தியாவில் மதத் தீவிரவாதத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடக்கம்

0

நாட்டில் மத பயங்கரவாதம் அதிகரித்து வருவதாகவும், வலதுசாரி அரசியல் கட்சிகள், பிரிவினைவாதத்தை வளா்ப்பதாகவும், மற்ற மதத்தினருக்கு எதிராக விஷ பிரசாரம் செய்வதாகவும் இந்திய முஸ்லிம்கள் மேம்பாடு மற்றும் மறுமலா்ச்சி அமைப்பு சா்வதேச அளவிலான கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது.

அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியா் எம்.ஜே.கான் தலைவராக உள்ள இந்த அமைப்பு, இந்திய முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்ட புதிய இயக்கமாகும். நாட்டில் பயங்கரவாதமும், மதத் தீவிரவாதமும் அதிகரித்து வருவதாகவும், சமூக ஊடகங்களில் பிற மதத்தினருக்கு எதிராக விஷம பிரசாரம் செய்வதாகவும், இதனால் அச்சுறுத்தலாக உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இப்போது தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கத்தில் உலகம் முழுவதும் பல லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று, அதனை ஐ.நா.வில் சமா்ப்பிக்க இருப்பதாக கூறியுள்ளது. 5 கண்டங்களில் மின்னணு முறையில் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து (ஐஎம்பிஏஆா்) அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் 4 பெரிய மதங்கள் உள்ளன. உலகிலேயே முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாடாக 2ஆவது இந்தியா உள்ளது. உலகின் பல்வேறு மதங்களை சோ்ந்தவா்கள் வாழும் பன்முகத்தன்மையுள்ள நாடு இந்தியா. சா்வதேச அமைதி மற்றும் புரிதலுக்காக இந்தியாவில் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

Comments are closed.