நீதிபதிகளின் நடத்தையை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாது -மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்

0

நீதிபதி மீதான விமர்சனம் நீதிமன்றத்தின் மீதான விமர்சனமாக மாறிவிடாது என்று தன் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடந்த ஜூன் 27 அன்று டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டிருந்தார். அதில், கொரோனா காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கையாண்ட விதம், விசாரணை நடத்திய முறை குறித்தும், பீமா கோரேகான் வழக்கில் கைதாகியுள்ள சமூக செயற்பாட்டாளர்கள் ராவ், சுதா பரத்வாஜ் ஆகியோருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததையும், நீதிபதிகள் அதனை கண்டிக்காமல் இருப்பதையும் கேள்விக்கு உட்படுத்தி இருந்தார்.

கடந்த 6 ஆண்டுகளாக எந்த விதமான அதிகாரப்பூர்வ அவசர நிலையும் பிறப்பிக்கப்படாமலேயே ஜனநாயகம் அழிக்கப்பட்டு இருப்பதாகவும், அதில், உச்ச நீதிமன்றத்தின் 4 முன்னாள் தலைமை நீதிபதிகள் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது என்றும் சாடியிருந்தார். இந்நிலையில் பிரசாந்த் பூஷணின் இந்த விமர்சனங்கள் நீதிமன்றத்தை அவமதிப்பதாக கூறி நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

இதற்கு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: “கடந்த ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் குறிப்பாக கடந்த நான்கு தலைமை நீதிபதிகளின் நடவடிக்கைகள், உச்சநீதிமன்றம் ஒரு வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படுவதை உறுதி செய்யவில்லை.

வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்படும் வழக்கு விசாரணை குறித்தும் அதிருப்தியடைந்துள்ளேன். ஆகவே ஒரு தலைமை நீதிபதியின் நடவடிக்கைகள் அல்லது தலைமை நீதிபதிகள் அடுத்தடுத்து ஒரே மாதிரியாக வருவதை நேர்மையாக விமர்சிப்பது நீதிமன்றத்தை அவதூறு செய்வதாக கருத முடியாது. நீதிமன்றத்தின் அதிகாரத்தை விமர்சிப்பதாகவும் கருத முடியாது.

கருத்துச்சுதந்திரம் மற்றும் விமர்சிப்பதற்கான இணக்கமான உரிமை ஆகியவை நீதித்துறையின் பலமாகும். இது நீதிமன்றத்தை அவமதிப்பதாகவோ அல்லது நீதிமன்றத்தின் கவுரவத்தை எந்த வகையிலும் குறைக்கவோ செய்யாது”. இவ்வாறு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது பதிலில் கூறியுள்ளார்.

நீதிமன்றம் அல்லது வெளியே நீதிபதிகளின் நடத்தை குறித்த விமர்சனத்திற்காக தண்டிக்கப்படுவோம் என்று நீதிமன்றத்தின் தன்னிச்சையான அதிகாரத்திற்கு பயந்து குடிமக்கள் வாழும் ஒரு சூழ்நிலையை ஏற்க முடியாது என்று முன்னாள் நீதிபதிகளும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.