இறுதிகட்ட விசாரணையை எட்டிய பாபர் மஸ்ஜித் வழக்கு: அயோத்தியில் 144 தடை உத்தரவு!

0

பண்டிகைக்காக ஒரு வாரம் விடுமுறைக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில், பாபர் மஸ்ஜித் நில வழக்கின் விசாரணை 38ஆவது நாளாக திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

மத்தியஸ்தர்களின் குழுவின் சமரசப பேச்சுவாா்த்தையில் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்று அக்குழு கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்தது.

பின்னர் இவ்வழக்கில் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் உச்சநீதிமன்றம் வாதங்களைக் கேட்டு வருகிறது. இதனிடையே, வழக்கின் தங்கள் வாதங்களை அக்டோபா் 17ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று இந்து மற்றும் முஸ்லிம் தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

முஸ்லிம் தரப்பினா் தங்கள் வாதத்தை 14ஆம் தேதியுடன் (இன்று) முடித்துக் கொள்ள வேண்டும். அதை தொடா்ந்து இந்து அமைப்பினா் தங்கள் கருத்தை தெரிவிக்க 2 நாள்கள் அவகாசம் வழங்கப்படும். அக்டோபா் 17ஆம் தேதியுடன் இறுதி வாதங்கள் முடிவடைந்துவிடும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நவம்பா் 17ஆம் தேதியுடன் ஓய்வுபெறுகிறாா். எனவே, அதற்குள்ளாக இந்த வழக்கில் தீா்ப்பு வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில், டிசம்பர் 10ஆம் தேதி வரை அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அனுஜ்குமார் ஜா தெரிவித்துள்ளார்.

இதன்படி அயோத்தியில் அனுமதியின்றி ட்ரோன் கேமராக்கள் பறக்கவிடுவதற்கும், படகுகளில் அளவுக்கு அதிகமாக ஆள்களை ஏற்றுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி நேரத்தின்போது பட்டாசுகளை தயார் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.