காவிமயம் ஆகிறதா இந்திய கிரிக்கெட் அணி?

0

அகமதாபாத்தில் உள்ள மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் பந்து வீச்சு முனைகளுக்கு ரிலையன்ஸ் முனை, அதானி முனை என பெயர் வைத்ததை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக அகமதாபாத்தில் உள்ள மோடேரா ஸ்டேடியம் புதிய அம்சங்களுடனும், நவீனவசதிகளுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் பெயர் நரேந்திர மோடி விளையாட்டரங்கம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ‘சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானம்’ எனப் பெயரிடப்பட்டிருந்த மைதானம், ‘நரேந்திர மோடி மைதானம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தின் பந்து வீச்சு முனைகளுக்கு, ரிலையன்ஸ் முனை எனவும், அதானி முனை எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “உண்மை தன்மை எவ்வளவு அழகாக வெளிகொண்டு வந்துள்ளது. நரேந்திர மோடி மைதானம். ரிலையன்ஸ் முனை (RELIANCE END), அதானி முனை (ADANI END), ஜெய்ஷா தலைமை வகிக்கிறார். #HumDoHumareDo (நாம் இருவர், நமக்கு இருவர்)” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த போராட்டம் தற்போது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. சில தினங்களுக்கு முன் தினம் உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாப் பாடகி ரிஹானா தனது டிவிட்டர் பக்கத்தில், நாம் ஏன் இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து பேசாமல் இருக்கிறோம்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம். ஆனால், நமது உள்நாட்டு விவகாரங்களில் பங்கேற்க இயலாது. இந்தியாவை பற்றி இந்தியர்களுக்கு தெரியும். இந்தியர்களே முடிவு எடுப்பார்கள். ஒரு தேசம் ஒற்றுமையாக இருக்கட்டும் என்று பாஜக ஆதரவாளார் போல் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார்.

சச்சினை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் ஷர்மா, சுரேஷ் ரெய்னா, தவான் உள்ளிட்ட முன்னணி கிரிக்கெட் வீரர்களும், அக்ஷய் குமார் போன்ற சினிமா பிரபலங்களும் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.