இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற பாஜக

0

இந்திய பொருளாதாரம் இதுவரை இல்லாத அளவிற்கு படுமோசமான வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக, இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தி மற்றும் உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கௌசிக் பாசு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி, 2016-ஆம் ஆண்டில் கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம், 2017-இல் அமல்படுத்திய அவசர கதியிலான ஜிஎஸ்டி வரிவிதிப்பு இந்திய பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டுபோனது. ஜிடிபி 3.5சதவிகிதம், 4.2 சதவிகிதம் என்று சரிந்தது. ஆனால், தற்போதைய கொரோனா தொற்று அதையொட்டிய பொதுமுடக்கம் பொருளாதாரத்தை பின்னோக்கி இழுத்து, மைனஸில் கொண்டு செலுத்திக் கொண்டிருக்கிறது.

2020-21 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் மைனஸ் 5 சதவிகிதம் என்ற வகையில் வீழ்ச்சியைச் சந்திக்கலாம் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் கூறி வருகின்றன. இந்நிலையில், “கொரோனா பாதிப்பால் இந்திய பொருளாதாரம் நடப்பாண்டில் 5 சதவிகித வீழ்ச்சியை சந்திக்கும் என்று தெரிகிறது.1947-ஆம் ஆண்டிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த 74 ஆண்டு காலத்தில் இப்படிப்பட்ட வீழ்ச்சி ஏற்பட்டதில்லை. அது இந்தாண்டு ஏற்பட்டு விடுமோ? என்று அச்சமாக உள்ளது”என்று இன்போசிஸ் நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.

இந்த கடினமான சூழலில், இந்திய பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும். அனைத்து துறைகளிலும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் பிரத்தியேகமான திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசைக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திரம் பெற்ற 1947-ஆம் ஆண்டிலிருந்து, இந்தியப் பொருளாதாரம் 2020-21-ஆம்ஆண்டு காலக்கட்டத்தில்தான் மோசமான நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ள கௌசிக் பாசு, “தற்போதைய இந்த மோசமான நிலையை, காலனிஆதிக்கத்தில் இந்தியா இருந்த காலத்தோடுதான் ஒப்பிட முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார். பிரிவினைவாத அரசியல் மற்றும் தற்போதைய நம்பிக்கையின்மை சூழல், நாட்டில் முதலீடு மற்றும் வேலை உருவாக்கத்தை கடுமையாக பாதிக்கிறது” என்ற கருத்தையும் வெளியிட்டுள்ளார்.

மேலும், நடப்பு நிதியாண்டிற்கான இந்திய பொருளாதார வளர்ச்சி மைனஸ் 3.2 சதவிகிதத்திலிருந்து அதிகபட்சம் மைனஸ் 9.5 சதவிகிதம் வரை இருக்கும் என்று ஐஎம்எப், ஏடிபி,பிட்ச், இக்ரா, எஸ் அண்ட் பி, நோமுரா உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய மற்றும் உள் நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி கணிப்புகள் கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள பாசு, அரசாங்கம் இப்போது முக்கிய கொள்கை முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.