இஷ்ரத் ஜஹான் என்கௌண்டர் வழக்கு: காவல்துறை அதிகாரிகளை விசாரணை செய்ய அனுமதி மறுப்பு!

0

இஷ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் டி.ஜி.வன்சாரா மற்றும் என். கே. அமீன் ஆகியோரை விசாரணை செய்வதற்கு ஒப்புதல் அளிக்க குஜராத் அரசாங்கம் மறுத்துவிட்டது என்று சிபிஐ நீதிமன்றத்தில் கூறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இந்த அதிகாரிகளை விசாரணை செய்ய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 197வது பிரிவின் கீழ் அனுமதி வழங்க குஜராத் அரசாங்கம் மறுத்துள்ளது.

இவ்விருவருக்கும் எதிரான வழக்கு விசாரணையை நிறுத்துமாறு எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மார்ச் 26 அன்று இதற்கான மனுவை தாக்கல் செய்யுமாறு கூறி உள்ளது.

ஜூன் 15 2004 அன்று மும்பையை சேர்ந்த 19 வயது பெண்மணி இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வர் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய வந்ததாக கூறி குஜராத் காவல்துறை இவர்களை என்கௌண்டரில் சுட்டுக் கொன்றது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ ஏழு நபர்களை குற்றவாளிகளாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டு இருந்தது.

குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட நீதிபதி எஸ்பி தமங் தலைமையிலான மூவர் குழு இந்த என்கௌன்டர் போலியானது என்று செப்டம்பர் 2009 இல் தனது அறிக்கையில் குறிப்பிட்டது. ஆனால் குஜராத் அரசாங்கத்தின் எதிர்ப்பை தொடர்ந்து உயர் நீதிமன்றம் இந்த அறிக்கையை நிறுத்தி வைத்தது.

டிசம்பர் 2011 இல் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற பட்டதை தொடர்ந்து வழக்கில் சம்பந்தப்பட்ட குஜராத் டி.ஐ.ஜி.வன்சாரா, ஏடிஜிபி பாண்டே உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். பாஜக தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்த பிறகு போலி என்கௌண்டர் வழக்குகளில் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர் அல்லது அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட சில காவல்துறை அதிகாரிகளுக்கு குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில பாஜக அரசுகள் பதவி உயர்வுகளையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.