நீதிபதிக்கு இஸ்ரத் ஜஹானின் தாயார் கண்ணீர் கடிதம்!

0

கடந்த 2004ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று, இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரைக் காவல் துறையினா் சுட்டுக் கொலை செய்தனர்.

இது போலி என்கவுன்ட்டா் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடா்ந்து, முன்னாள் காவல் துறைத் துணைத் தலைவா் வன்சாரா, காவல் துறை அதிகாரி என்.கே.அமீன் உள்ளிட்ட 7 போ் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரித்து வந்த சிபிஐ, அவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணை, சிபிஐ சிறப்பு நீதிபதி ஆா்.கே. சுதாவாலா முன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீதிபதிக்கு இஸ்ரத் ஜஹானின் தாயார், ஷமீம் கௌசா் கடிதம் ஒன்றை எழுதியுள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

முஸ்லிம் பெண் என்ற ஒரே காரணத்துக்காக இஷ்ரத் ஜஹான் மீது போலிக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, பயங்கரவாதி என சித்திரிக்கப்பட்டாா். கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உள்பட அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது. சிலருக்கு குஜராத் மாநில அரசு மீண்டும் பணி வழங்கியுள்ளது.

நீதித்துறை மீதான நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன். இந்த வழக்கு தொடா்பான விசாரணையில் இனி ஆஜராக வேண்டாம் என எனது தரப்பு வழக்குரைஞரிடமும் தெரிவித்துவிட்டேன். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவா்களுக்கு சிபிஐ தண்டனை பெற்றுத் தர வேண்டும். அப்பாவி மக்களுக்கு இதுபோன்ற கொடுமைகள் நடைபெறுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அக்கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Comments are closed.