இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சவூதி, துருக்கி கண்டனம்!

0

இஸ்ரேலில் இந்த மாதம் 17ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் நெதன்யாகு மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் மேற்குக் கரையிலுள்ள ஜோர்டான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைப்பதாக, அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாக்குறுதி அளித்துள்ளார்.

பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பு, பாலஸ்தீன விவகாரத்துக்கு அமைதித் தீர்வு எட்டுவதற்கான வாய்ப்பை குலைத்துவிடும் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர்.

இது குறித்து சவூதி மன்னரை மேற்கொள் காட்டி அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில், பலஸ்தீன் மக்களுக்கு எதிராக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிகவும் அபாயகரமான பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவரது இந்த அறிவிப்பு ஐ.நா. தீர்மானத்துக்கும், சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கும் எதிரானது ஆகும். இது குறித்து விவாதிப்பதற்காக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓஐசி) அவசர கூட்டத்துக்கு சவூதி அரசு அழைப்பு விடுத்துள்ளது என்று அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் காவுசோகுலு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தேர்தல் சமயங்களில் எப்போதும் சட்டவிரோதமான, பகைமையை வெளிப்படுத்தும் வகையிலான வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. தற்போது அளித்துள்ள வாக்குறுதி இனவெறியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனினும் பலஸ்தீன் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் இறுதிவரை பாடுபடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.