மோடி நம்பகத்தன்மை இல்லாதவர்: இது காந்தியின் இந்தியா அல்ல – ஃபருக் அப்துல்லா

0

காஷ்மீர் மக்கள், மத்திய அரசை நம்புவதற்கு, இப்போது இருப்பது ஒன்றும் காந்தியின் இந்தியா அல்ல! என்று ஜம்மு – காஷ்மீர்மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

சட்டப்பிரிவு 370 நீக்கத்தையொட்டி மோடி அரசால் வீட்டுச் சிறை வைக்கப்பட்ட பரூக் அப்துல்லா 7 மாதங்களுக்குப் பிறகே விடுதலை செய்யப்பட்டார். எனினும், உடனடியாக தீவிர அரசியலில் இறங்க முடியாத வகையில் தடைகள் தொடர்ந்து வருகின்றன. இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு பரூக் அப்துல்லா அளித்த பேட்டி கூறியிருப்பதாவது:

“பாஜக அரசை இனி நம்ப முடியாது. நாள்தோறும் அவர்கள் பொய்களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போதுள்ள இந்தியா, ‘மகாத்மா காந்தியின் இந்தியா’ அல்ல. பிரதமருக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால், இனிமேலாவது நேர்மையாகவும் உண்மையாகவும் இருங்கள் என்பதுதான். தான் செய்த காரியம் (காஷ்மீருக்கான 370 நீக்கம், மாநில அந்தஸ்து பறிப்பு) தவறு என்பது அவருக்கு நன்றாக தெரியும்.

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானம் கடந்த 2019 ஆகஸ்டில் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் முன்வைக்கப்பட்டது. அதற்கு ஒருநாள் முன்னதாகத் தான் பிரதமர் மோடியைச் சந்தித்தேன். ஆனால், இப்படி ஒருதீர்மானம் கொண்டுவரப்பட இருப்பது பற்றி சிறு குறிப்பைக் கூட அப்போது மோடி வெளிப்படுத்தவில்லை.

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் குவிப்பு, சுற்றுலா பயணிகள் வெளியேற்றம், அமர்நாத் யாத்திரை ரத்து உள்ளிட்டவை குறித்து மோடியிடம் கேள்வி எழுப்பினேன். பாகிஸ்தான் உடனான போர் என்பது போன்ற நிலைமையையே அப்போது காஷ்மீரில் மத்திய பாஜக அரசு உருவாக்கியது. மோடியை சந்தித்து நாங்கள் கேட்டபோது அவர் எதுவும் சொல்லவில்லை. மாறாக சம்பந்தமில்லாத விஷயங்களை அவராகவே பேசினார். பிரதமர் மோடி நம்பகத்தன்மை இல்லாதவர்” இவ்வாறு ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.

Comments are closed.