பாஜகவை எதிர்த்தால் தேசவிரோதியா? அமித்ஷாவுக்கு கஷ்மீர் தலைவர்கள் பதிலடி

0

குப்கார் தீர்மானத்திற்கான மக்கள் கூட்டணியில் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு கட்சி ஆகியவை இணைந்துள்ளன.

காங்கிரஸ் கட்சியும், குப்கார் கும்பலும் சேர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைத் தீவிரவாததுக்கும், கொந்தளிப்பான சூழலுக்கும் தள்ளளும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார்.

அமித்ஷா கருத்திற்கு பதிலடியாக மெகபூபா முஃப்தி நேற்று நிருபர்களுக்குப் பேட்டியில், “எதிர்க்கட்சிகளை சித்தரிக்கப்பட்ட எதிரிகளாகவும் உருவகப்படுத்தி இந்தியாவைப் பிளவுபடுத்துவதுதான் பாஜகவின் திட்டம். தற்போது குப்கார் என்ற வார்த்தையை, பாஜக கையில் எடுத்துள்ளது. தேசத்தில் வேலையின்மை, பணவீக்கம் அதிகரித்து வருவதையடுத்து மக்களைத் திசைதிருப்ப பாஜக முயல்கிறது.

பாஜக அரசியல் அதிகாரத்திற்காக பல்வேறு கூட்டணிகளை அமைக்கிறது. ஆனால், நாங்கள் சேர்ந்த கூட்டணியை மட்டும் தேசிய நலனுக்கு எதிரானது என்று கூறுகிறது.

நீண்டகாலமாக செய்துவந்த ஒரு பழக்கத்தைக் கைவிடுவது கடினமானது. குப்கார் கும்பல் என்று எங்களைத் தேசவிரோதியாகச் சித்தரிக்கிறது” என்று மெகபூபா முப்தி தெரிவித்தார்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லாஹ், ட்விட்டர் பதிவில், “மரியாதைக்குரிய உள்துறை அமைச்சர் கடுமையான சொற்களால் பேசியதற்குப் பின்னணியில் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைப் புரிந்துகொண்டேன். தேர்தலை மக்கள் கூட்டணி புறக்கணிக்கத் தயாராகி வருகிறது என அமித்ஷா கூறியுள்ளார். இதன் மூலம் ஜம்மு கஷ்மீரில் பாஜகவும், புதிதாக உருவாக்கப்பட்ட கிங்ஸ் கட்சியும் சுதந்திரமாகச் செயல்படலாம்.

ஜம்மு கஷ்மீரில் மட்டும்தான் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டாலோ, ஜனநாயக நடைமுறையில் பங்கேற்றாலோ வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, தேசிய விரோதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். உண்மை என்னவென்றால், பாஜகவை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்கள் தேசவிரோதிகள், ஊழல்வாதிகள் என்று முத்திரை குத்தப்படுவார்கள்.

நாங்கள் கும்பல் இல்லை அமித்ஷா ஜி. நாங்கள் சட்டபூர்வமான அரசியல் கட்சிகள். தேர்தலில் வெற்றிக்காகப் போராடும் கட்சிகள். தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவோம்” என உமர் அப்துல்லாஹ் ட்விட்டரில் தெரிவித்தார்.

Leave A Reply