பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சருக்கு ஆயுள் தண்டனை விதிக்க CBI வலியுறுத்தல்

0

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில், பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் திலீப் ராய் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ வலியுறுத்தியுள்ளது.

அன்றைய காலத்தில் பிரதமராக இருந்த வாஜ்பாய் அமைச்சரவையில் நிலக்கரித்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் திலீப் ராய். இவரது பதவிக் காலத்தில் 1999இல் ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி பகுதியில் நிலக்கரிச் சுரங்கத்தை CTL என்ற நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்த நிலையில் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் திலீப் ராய் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 409 உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையாகும். மேலும் நிலக்கரித்துறை அமைச்சகத்தில் அப்போது அதிகாரிகளாக பணியாற்றிய பிரதீப்குமார் பானர்ஜி, நித்யானந்த் கெளதம் மற்றும் CTL  நிறுவன இயக்குநர் மகேந்திரகுமார் அகர்வால் ஆகியோர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டனர்.

இந்நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் காணொலி மூலம் புதன்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் வழக்குரைஞர்கள் வி.கே.சர்மா, ஏ.பி.சிங் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கவும், CTL நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என்றும் வழக்குரைஞர்கள் கேட்டுக்கொண்டர்.

இந்த வழக்கில் எங்களின் வயது மூப்பு காரணமாக தண்டனை வழங்குவதிலிருந்து கருணை காட்ட வேண்டும்’ என்று குற்றவாளிகள் தரப்பில் வாதாடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களைக கேட்ட சிறப்பு நீதிபதி பாரத் பராசர், இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அப்போது குற்றவாளிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Leave A Reply