நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிநிதித்துவ கோரிக்கை வைத்ததற்காக முஸ்லிம்கள் மீது வழக்கு

0

நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட 16 முஸ்லிம் செயற்பாட்டாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடாளுமன்ற தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை அரசியல் கட்சிகளிடம் வைப்பதற்காகவே இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது என்று செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

சமூக அமைதியை சீர்குலைத்தல், குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துதல் மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து விஜயகுமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் இந்தி நாளிதழான ஆசாத் சிப்பாகி-யில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 15 அன்று நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் முஸ்லிம்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வில்லை என்றால் மூன்றாவது அணியின் கீழ் அவர்கள் தேர்தலை எதிர் கொள்வார்கள் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் நிகழ்ச்சி குறித்து தங்களுடைய பத்திரிக்கையில் எதுவும் வெளிவரவில்லை என்று ஆசாத் சிப்பாகி முதன்மை ஆசிரியர் ஹரி நாராயன் சிங் உள்ளூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ராஞ்சி நகரில் ஒரு வழக்கில் எத்தனை நபர்கள் குற்றம்சாட்டப்பட்டிருப்பத இதுதான் முதல் முறை என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நதீம் கான் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடுபவர்கள் என்றும் அவர்களில் சிலர் பீகார் மாநிலத்திலிருந்து ஜார்கண்ட் தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தவர்கள் என்றும் குறிப்பிட்டார். மைய நீரோட்ட அரசியலில் இருந்து முஸ்லிம்களை ஒதுக்கி வைத்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாகவே நீடிக்கச் செய்யும் திட்டமிட்ட சதி இது என்றும் அவர் குற்றம் சாட்டினார். அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை இன்னும் வாக்கு வங்கிகளாகவே கருதுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

எங்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக கடந்த மூன்று மாதங்களாக முஸ்லிம்கள் மற்றும் இதர ஒதுக்கப்பட்ட சமூகங்கள் வாழும் பகுதிகளில் நாங்கள் பகுதிகளில் மேற்கொண்டோம். இந்த நிகழ்ச்சிகள் எந்த குறிப்பிட்ட பேனரின் கீழ் நடத்தப்படுவது இல்லை என்றும் நதீம் கான் கூறினார்.

அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து நிகழ்ச்சிகளை நடத்துவது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கருதப்பட முடியாது என்று சிபிஐ (எம்.எல்) தலைவர் வினோத் சிங் கூறினார். அரசியல் கட்சிகளிடம் பிரதிநிதித்துவத்தை கோருவது ஒவ்வொரு சமூகத்தின் உரிமை என்றும் அவர் கூறினார்.

Comments are closed.