JNU மாணவர் நஜீப் அஹமத் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி AMU மாணவர் போராட்டத்தில் தடியடி

0

JNU மாணவர் நஜீப் அஹமத் ABVP இயக்கத்தினருடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு மர்மமான முறையில் காணாமல் போனார். (பார்க்க செய்தி). இவரை கண்டுபிடித்து தரக்கோரி அவரது குடும்பமும் சக மாணவர்களும் பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் அலிகார் முஸ்லிம் பல்கலைகழக மாணவர்கள் 76 நாட்களுக்கும் மேலாக காணாமல் போன நஜீபின் வழக்கை விசாரிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை கலைக்க மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி மாணவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நஜீப் காணாமல் போனதற்கு காரணமான ABVP அமைப்பினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கமால் அவரை கண்டுபிடித்து தரக்கோரி போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமான தாக்குதல் நடத்துவது எவ்விதத்தில் நியாயம் என்று அம்மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அலிகார் முஸ்லிம் பல்கலைகழக மாணவர் போராட்டத்தை கலைக்க காவல்துறையோடு RAF(Rapid Action Force) மற்றும் PAC (Provincial Armed Constabulary) ஆகியவற்றை பயன்படுத்தியது நிலைமையை ஒரு பதற்றமான சூழ்நிலை போல காட்சிப்படுத்த என்று மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நஜீப் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கூறி போராட்டம் துவங்கிய உடனேயே காவல்துறை தடியடி நடத்த தொடங்கிவிட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆட்சி மாற்றத்துடன் காவல்துறையின் போக்குகளும் மாறுவதில்லை என்றும் தங்களை மதசார்பற்ற அரசு என்று காட்டிக்கொள்ளும் உத்திர பிரதேச அரசின் ஆட்சியிலும் காவல்துறையினர் முஸ்லிம்கள் மீது ஒரு வித வெறுப்புடனேயே செயல்பட்டு வருவதாக அம்மாணவர்கள் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் மனதில் பதிந்துள்ள முஸ்லிம்கள் மீதான வெறுப்பை இந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை கண்டால் தெளிவாக அறிந்துகொள்ளலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் JNU வளாகத்திலும் நஜீப் மறைவிற்கு காரணமான ABVP யினரிடம் விசாரணை நடத்துவதை விட்டுவிட்டு நஜீபை தேடுகிறோம் என்ற சாக்கில் சிறும்பான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களை காவல்துறையினர் துன்புறுத்தி வருவதாக JNU மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பல்கலை கழக வளாகத்திலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நஜீப் காணாமல் போன அக்டோபர் 15 இல் இருந்து ஆர்.எஸ்.எஸ். மாணவ அமைப்பான ABVP யும், JNU பல்கலைகழக நிர்வாகமும், காவல்துறையும் கூட்டாக செயல்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நஜீபை மீட்டு கொண்டுவராமல் பல்கலைகழக வளாகத்தில் உள்ள ஜனநாயக உரிமைகளை கூட மாணவர்களுக்கு வழங்காமல் மாணவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது AMU மாணவர்கள் போராட்டத்தில் நடத்தப்பட்ட இந்த காவல்துறை தாக்குதல்கள்  உத்திர பிரதேச தேர்தலை மனதில் வைத்து நடத்தப்பட்டுள்ளது என்றும் மத்திய பா.ஜ.க. அரசு சில ஊடக நிறுவனங்களுடன் சேர்ந்து நஜீபிர்கான மாணவ போராட்டத்தை சட்ட விரோத நடவடிக்கை என்றும் முஸ்லிம் மாணவர்களின் அராஜக செயல் என்றும் பரப்புரை செய்து வாக்காளர்களிடம் பிரிவினையை உண்டுபண்ண முயற்சி செய்கிறது என்று மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Comments are closed.