ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி

0

ரயில்வே துறையை தனியாரிடம் வழங்குவது விரோத செயல். தனியாருக்கு வழங்கி இட ஒதுக்கீட்டை ஒழிப்பது ஆர்.எஸ்.எஸின் கொள்கை. அதை தற்போது பாஜக அரசு வேறு வழியில் செய்திருக்கிறது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் அவர் தெரிதுள்ளதாவது: “மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, ரயில்வே துறையை தனியாரிடம்விட ஆயத்தமாகி விட்டது. முதலில், ஒட்டகம் கூடாரத்திற்குள் தலையை நுழைப்பதுபோல, சில பயணிகள் ரயில்கள் தனியார் மயமாகும் வகையில் தனியார் ரயில்களை விடுவார்கள்.

நாட்டு மக்களின் எளிமையான குறைந்த கட்டணத்தில் பயணம் செய்திடவும், ஏராளமானவர்கள் எளிதில் எங்கும் செல்லவும் வாய்ப்பான ரயில்வேயை தனியார்களுக்கும் (கார்ப்பரேட்) முதலாளிகளுக்கும் விடுவது என்பது திடீரென்று இவர்களுக்குத் தோன்றிய யோசனையோ, திட்டமோ அல்ல. அரசுத் துறை – பொதுத் துறையை ஒழிக்கவேண்டும். அரசின் செயலாக்கங்களையும் படிப்படியாக நீக்கவேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படியே, முதல்கட்டமாக இப்படிப்பட்ட முயற்சிகள் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் உள்ள ஒரு மிருக பலத்தைப் பயன்படுத்தி திட்டமிட்டு நடத்தப்படும் திட்டம் தான் இது.

தனியார் துறைக்கு ரயில்வே போனால், சமூகநீதி என்ற இட ஒதுக்கீடு தற்போது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு – பொதுத்துறை என்பதால் கிடைக்கும் வசதி ஒழிக்கப்பட்டு விடும். இந்த ஆபத்தும் இதில் உள்ளங்கும்.

அண்மையில் மத்திய பாஜக அரசு, இந்திய ரயில்வேயில் புதிய பணியிடங்களை நிரப்ப தடை விதித்துள்ளது என்பதே இதற்கு போதிய ஆதாரமாகும். இதை ரயில்வே தொழிலாளர் சங்கங்களும் எதிர்த்திருப்பது வரவேற்கத்தக்கது.

எனவே, அனைத்து கட்சிகள், சமூக நல அமைப்புகள் இணைந்து இதனை எதிர்த்து, இத்திட்டத்தை மத்திய பாஜக அரசு கைவிட வற்புறுத்த வேண்டும்” என்று கி.விரமணி தெரிவித்துள்ளார்.

Comments are closed.