தேர்தல் பிரச்சாரங்கள் போன்ற நிகழ்வுகளில் முகக்கவசம் அணிவதை வலியுறுத்தி, ‘லெட்ஸ்கிட் பவுண்டேஷன்’ என்ற அமைப்பு கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.
செப்டம்பர் 30 அன்று பெங்களூரு தெற்குத் தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவை வரவேற்க, விமான நிலையத்தில் திரண்ட கூட்டத்தில், கொரோனா தொடர்பான சமூக அறிவுரைகள் பின்பற்றப்படாததை, அந்த அமைப்பு மனுவில் சுட்டிக்காட்டி இருந்தது. இந்த அரசியல் நிகழ்வில், மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி உள்ளிட்ட பாஜக-வினர் ஒருவர் கூட முகக்கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை. இதற்கன புகைப்பட ஆதாரங்களையும், வழக்கறிஞர் ஜி.ஆர். மோகன் இணைத்திருந்தார். இந்த மனுவை, தலைமை நீதிபதி அபாய் ஓகா மற்றும் நீதிபதி விஷ் வஜித் ஷெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையில் “முகக்கவசம் அணியாமல் விதிமுறைகளை மீறியதற்காக மக்களவை உறுப்பினர் மற்றும் இதர அரசியல் தலைவர்களிடம் மாநில அரசு அபராதம் வசூலித்ததா? அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? அந்த நிகழ்வில் விதிமுறை மீறல் இருந்ததற்கான புகைப்படங்கள் இருந்தும், காவல்துறை தரப்பில் எதற்காக உண்மை மறைக்கப்படுகிறது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.