ஈஷா அமைப்பின் தலைவர் சத்குருவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கிடுக்குப்பிடி

0

‘ஈஷா’ அமைப்பின் தலைவர் சத்குரு, ‘காவிரி கூக்குரல்’ (Cauvery Calling) என்ற திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றின் கரைகளில் 253 கோடி மரங்களை நட முடிவெடுத்துள்ளார். ஒரு மரத்திற்கு ரூ.42 வழங்க வேண்டும் எனக்கூறி நிதி வசூலித்து வருகிறார். இதற்கு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

அவரது கணக்கின்படி, மொத்தம் ரூ.10,626 கோடி வசூலிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இவ்வளவு பெரிய தொகையை வசூலிப்பது தொடர்பாக அவரது ஈஷா அமைப்பும், காவிரி கூக்குரல் திட்டமும் மத்திய, மாநில அரசுகளிடம் முறையான அனுமதி பெறவில்லை. மேலும் சட்டத்திற்கு புறம்பாக விவசாயிகளை கட்டாயப்படுத்தி நிதி வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஏ.வி.அமர்நாத், கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அபேய் ஒகா, நீதிபதி ஹேமந்த் சந்திரகவுடர் ஆகியோர் கொண்ட அமர்வுமுன்பு (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு வந்தது.

“சத்குருவின் ஈஷா அமைப்பும், காவிரி கூக்குரல் திட்டத்தின் கீழ் நிதி வசூலிப்பதற்காக உரிய அனுமதி பெறவில்லை. இத்திட்டத்தின் கீழ் பொதுமக்களை கட்டாயப்படுத்தி நிதி வசூலிக்கக்கூடாது. ஆன்மீக அமைப்புகள் சட்டத்தையும், அரசியலமைப்பையும் மீறியவை அல்ல. இத்திட்டத்தில் எந்த அமைப்பின் கீழ் நிதி வசூலிக்கிறீர்கள்? இதுவரை எவ்வளவு நிதி வசூலித்துள்ளீர்கள்? இதுகுறித்து கர்நாடக அரசு வரும் பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என தலைமை நீதிபதி அபேய் ஒகா உத்தரவிட்டார்.

Leave A Reply