பல கோடி ரூபாய் ஊழல் செய்த எடியூரப்பா மகன்: பாஜக எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டு

0

கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, கர்நாடக அரசுக்கு இணையாக ஒரு அரசாங்கத்தை நடத்தி வருவதாகவும், பல கோடி ரூபாய் ஊழல் செய்துவருதாகவும் பாஜக எம்.எல்.ஏ-க்கள் 7 பேர் பகிரங்கமாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

இதில் கமிஷன் தொகையை வசூலிக்க மட்டும் 31 பேர்கொண்ட குழுவை, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நியமித்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக, பாஜக தலைமைக்கு 6 பக்க கடிதத்தை 7 பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டாக எழுதி உள்ளனர்.

அதில், எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, கர்நாடக அரசுக்கு இணையாக ஒரு அரசாங்கத்தை நடத்தி வருவதாகவும், டெண்டர்கள் மற்றும் பிற ஒப்பந்தங்களில் தலையிட்டு, முறைகேடாக பல கோடி சம்பாதித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

“இந்த முறைகேடான செயலுக்கு, 31 பேர் கொண்ட குழுவை விஜயேந்திரா உருவாக்கி இருக்கிறார், அவர்கள் கட்சி மற்றும் அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளைவகித்து வருகின்றனர்.

இவர்களில், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அவரது உறவினர்கள் மற்றும் முதலமைச்சரின் பணியாளர்கள் கூட இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கும் பாஜக எம்எல்ஏ-க்கள், “மாநிலத்தின் அனைத்து திட்டங்களிலும் காங்கிரஸ் ஆட்சியின் போது, அப்போதைய முதல்வர் சித்தராமையா அரசு 10 சதவிகிதம் கமிஷன் எடுத்துக் கொண்டதாக மோடி குற்றம் சாட்டினார். ஆனால், தற்போதைய கர்நாடக பாஜக அரசாங்கம் 15 சதவிகிதம் ‘விஎஸ்டி – விஜயேந்திர சேவை வரி’ வசூலிக்கிறது என்று கடுமையாக குறிப்பிட்டுள்ளனர்.

பாஜக எம்எல்ஏ-க்களின் குற்றச்சாட்டுக்களை விஜயேந்திரா மறுத்துள்ளார். ‘சில எம்.எல்.ஏக்களின் குற்றச்சாட்டுக்கள், தனக்கு எதிரான அரசியல் சதி’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.