கஸகஸ்தான் அதிபர் திடீர் ராஜினாமா!

0

கஸகஸ்தான் நாட்டின் அதிபரான நூர் சுல்தான் நஸார்பயேவ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். 29 ஆண்டுகள் நாட்டின் அதிபராக பதவி வகித்த இவர் பதவியை ராஜினாமா செய்துள்ளது கேள்விகளையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது பதவி விலகலுக்கான காரணத்தை அதிபர் வெளியிடவில்லை. நாட்டில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு ஏதுவாக புதிய தலைமுறை தலைவர்களின் எழுச்சியை எளிதாக்குவது கஸகஸ்தான் நாட்டை தோற்றுவித்த தனது கடமை என்று 78 வயதான அதிபர் கூறியுள்ளார்.

1989 இல் இருந்து நாட்டின் தலைவராக உள்ள நூர்சுல்தான் 1991இல் முன்னாள் சோவியத் ரஷ்யாவிலிருந்து கசகஸ்தான் தனி நாடாக பிரிவதற்கு சில வாரங்களுக்கு முன் நாட்டின் அதிபராக பதவியேற்றார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான இவர் ஒற்றை கட்சி ஆட்சி முறையின் மூலம் தொடர்ந்து அதிபராக பதவி வகித்து வந்துள்ளார். இறுதியாக 2015 இல் நடைபெற்ற தேர்தலிலும் 98 சதவீத வாக்குகளைப் பெற்று அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் அதிபரானார்.

அடுத்த தேர்தல் நடைபெறும் முறை நாடாளுமன்ற சபாநாயகர் இடைக்கால தலைவராக இருப்பார் என்றும் அதிபர் அறிவித்துள்ளார். அதிபர் பதவியிலிருந்து விலகிய போதும் ஆளும் கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ந்து தான் நீடிப்பதாகவும் நாட்டின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரத் தலைவராக தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார். அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் ‘தேசத்தின் தலைவர்’ என்ற அரசியல் சாசன அந்தஸ்து பயன்படுத்தி நாட்டின் கொள்கை முடிவுகளில் இவர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

18.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பெற்றோலிய வளம் மிக்க நாட்டின் பல்வேறு நகரங்களில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை தொடர்ந்து அதிபர் பதவி விலகியதாக கூறப்படுகிறது.

Comments are closed.