குற்றவாளிகளின் கூடாரமாக மாறுகிறதா கேரள காவல்துறை?

0

ஆகஸ்டு மாதம் 24 ஆம் தேதி, கேரள மாநிலம் பாலக்காடு வடக்கு மற்றும் கல்லடிக்கோடு ஆகிய காவல்நிலையங்களிலிருந்து காவலர்கள் கல்லடிக்கோடுக்கு அருகில் உள்ள மாணவர்களான பிலால், அப்துல் ரஹ்மான் ஆகியோரின் வீட்டிற்கு சென்றனர்.பாலக்காட்டில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தின் பெயரால் விசாரணை நடத்த வந்ததாக கூறியுள்ளனர்.. ஆனால் விசாரணையின் பெயரால் துவக்கம் முதலே காவலர்கள் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக அவ்வீட்டில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

காவல்துறை வீட்டிற்கு வந்துள்ளதை அறிந்து அங்கு வந்த மாணவர்களின் தந்தையை இழிவான வார்த்தைகளால் ஏசியுள்ளனர்.பாலக்காட்டில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக ஒருவரை பிடித்து செல்ல வந்ததாக கூறிய காவல்துறையினர் அவரது இளைய சகோதரரையும் சேர்த்து எக்காரணமுமின்றி பிடித்து சென்றனர்.விசாரணை நடத்தி விட்டு விடுவிப்போம் என்றும், இருவரையும் அழைத்து செல்ல காலையில் காவல் நிலையம் வருமாறும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலில் கல்லடிக்கோடு காவல்நிலையத்திற்கும் பின்னர் பாலக்காடு வடக்கு காவல்நிலையத்திற்கும் கொண்டு சென்ற இருவரையும் மிகவும் கொடூரமாக மிருகத்தனமாக தாக்கியுள்ளனர். இருவரையும் கடுமையாக அடித்து உதைத்த பிறகு இரு கால்கள் மீதும் ஏறி நின்று லத்தியை உருட்டியதோடு, முதுகெலும்பிலும் தாக்கியுள்ளனர்.அடித்து துவைத்த பிறகு பிறப்புறுப்புக்களில் மிளகு ஸ்ப்ரே தெளித்து தீயால் சுட்டுள்ளனர்.பிலாலுக்கு மின்சார அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.

பிறப்புறுப்பில் மிளகு ஸ்ப்ரே தெளிக்கும்போது உங்கள் மூலம் முஸ்லிம் குழந்தைகள் பிறக்க வேண்டாம் என்று ஆக்ரோஷமாக கத்தியுள்ளனர்.கடந்த 1991 டிசம்பர் 15ல் இதே பாலக்காடு நகரத்தில் ’தந்தையில்லாத முஸ்லிம்களின் பிணங்கள் எனக்கு வேண்டும்’ என்று ஒரு உயர் போலீஸ் அதிகாரி கர்ஜித்தார்.அதேபோன்ற நடவடிக்கை தான் தற்போது பாலக்காட்டில் நடந்துள்ளது.

ஆகஸ்டு 24-ஆம் தேதி மாலை போலீஸ் காவலில் கொண்டு செல்லப்பட்ட இருவரையும் 24 மணி நேரத்திற்கு மேலாக காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.25 ஆம் தேதி காலையில் காவல்துறையின் கூற்றுக்கிணங்க மகன்களை அழைத்து வரச் சென்ற தந்தையிடம் அவர்களை காட்டாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.இரண்டாம் நாள் மாலையில் தான் பிலாலை ஒரு வழக்கில் குற்றவாளியாக சேர்த்து விட்டு அவரது இளைய சகோதரரை விடுவித்துள்ளனர்.

காவல்துறையின் சித்திரவதையால கடுமையாக காயமுற்ற அப்துல் ரஹ்மான் பாலக்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.எழுந்து நடக்க இப்போதும் சிரமப்படும் அப்துல்ரஹ்மானுக்கு முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.சிறுநீருடன் இரத்தமும் கலந்து வந்துள்ளது.பிறப்புறுப்பில் ஏற்பட்டுள்ள எரிச்சல் காரணமாக சிரமப்படுவதாக அப்துல் ரஹ்மான் கூறுகிறார்.காவல்துறையினரின் தாக்குதலால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இப்போதும் அவர் விடுபடவில்லை.

சித்திரவதைச் செய்யப்பட்ட பின்னர் கைதுச் செய்து பிலாலை கொண்டு செல்லும்போது நடக்க முடியாமல் தளர்ந்த நிலையில் இருந்தார்.கடுமையாக தாக்கியும், பிறப்புறுப்பில் மிளகு ஸ்ப்ரே தெளித்தும் வெறி அடங்காத காவல் ஆய்வாளர் சுதீஷ்குமார் பிறப்புறுப்பில் மின்சார அதிர்ச்சியும் கொடுத்ததாக பிலால் தெரிவித்தார்.

கைதுச் செய்யப்பட்டதை பதிவுச் செய்து வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் மாஜிஸ்ட்ரேட்டின் முன்னால் ஆஜர்படுத்தப்பட்ட பிலாலுக்கு அருகில் அச்சுறுத்தும் வகையில் காவலர்கள் நின்று கொண்டனர்.சித்திரவதையை குறித்து பேசினால் உன்னையும் வழக்கில் சிக்க வைப்போம் என்று மிரட்டி விடுவித்ததாக அப்துல் ரஹ்மான் கூறுகிறார்.பிலாலுக்கு சிகிட்சையை வழங்காமல், கோவிட் நெறிமுறைகளச் சுட்டிக்காட்டி குடும்பத்தினரையோ, வழக்கறிஞரையோ சந்திக்க அனுமதிக்காமல் சிறையிலடைத்துள்ளனர்.

பிலால் மீதான வழக்கும் உண்மை நிலையும்

பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ் கிரிமினலின் ஆட்டோ ரிக்‌ஷாவை தாக்கிய வழக்கில் தொடர்பிருப்பதாக கூறி பிலாலை கைதுச் செய்துள்ளது காவல்துறை.இளைய சகோதரன் அப்துல்ரஹ்மானை மிருகத்தனமாக சித்திரவதை செய்ததை குறித்து மற்றும் மத ரீதியான இழிச் சொற்களை பயன்படுத்தியது குறித்த கேள்விகளுக்கு காவல்துறையினரிடம் பதில் கிடையாது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தால் கைதுச் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக ஒரு நாள் முழுவதும் காவலில் வைத்து சித்திரவதைச் செய்துள்ளனர்.காவல்துறையினர் கூறும் சம்பவத்தில் மாணவரான பிலால் குற்றவாளி என்பது கட்டுக்கதையாகும்.

ஆர்.எஸ்.எஸ்காரரின் ஆட்டோ ரிக்‌ஷா தாக்கப்பட்ட வழக்கில் துரிதமாக விசாரிக்கும் பாலக்காடு வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் சுதீஷ் குமாரின் நடவடிக்கையில் மர்மம் உள்ளது.

ஆகஸ்டு 9-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் செயல் வீரர் ஒருவரின் கடையை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் அடித்து நொறுக்கினர்.இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளின் பெயர்களை விவரமாக எழுதி புகார் அளிக்கப்பட்ட பிறகு கூட இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.காவல்நிலையத்தில் புகாரை ஏற்க மறுத்தபோது, டி.எஸ்.பியிடம் புகார் அளிக்கப்பட்டது.அதன் பிறகே காவல்துறை புகாரை ஏற்றது.ஆனால், அந்த வழக்கில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை ஆர்.எஸ்.எஸ்காரரின் ஆட்டோ தாக்கப்பட்ட வழக்கில் விரைந்து செயல்பட்டு மாணவர்களை கைதுச் செய்து மிருகத்தனமாக நடந்து கொண்டுள்ளனர்..

இச்சம்பவம் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டிய ஒன்று.கேரள காவல்துறை குற்றவாளிகளின் கூடாரமாகவும், வகுப்புவாதமும் அதிகரித்து வருகின்றன.காவல்நிலைய சித்திரவதையும், காட்டுமிராண்டித்தனமான கொடுமைகளும், காவல்நிலைய மரணங்களும் அதிகரித்து வருகின்றன.ஆர்.எஸ்.எஸ் சுதந்திரமாக ஊடுருவி நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் உள்துறை அமைச்சகமும், காவல்துறை அமைப்பும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.சங்க்பரிவாரின் மனோநிலை காவல்துறையில் அதிகரித்து வருவதை சுதீஷ்குமார்கள் நிரூபிக்கின்றார்கள்.

இப்போது ஊடகங்களில் காவல்துறையினரை மத ரீதியாக ஆட்சேபித்ததன் காரணமாக வழக்கு பதிவுச் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.தாங்கள் செய்த சித்திரவதையை வெளியே கூறினால் பொய் வழக்கில் சிக்க வைப்போம் என்று கூறிய காவல்துறையினர் அதை செயல்படுத்தியுள்ளனர்.அதிகாரத்தை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களையே மீண்டும் கைதுச் செய்து மீண்டும் கொடுமை இழைக்கிறது காவல்துறை. சில ஊடகங்கள் இதற்கு உறுதுணையாக இருக்கின்றன.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கேம்பஸ் ஃப்ரண்ட் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், போராட்டம் நடத்துவது எஸ்.டி.பியை என்பதாலும் காவல்துறையின் பயங்கரவாதத்தை குறைத்து மதிப்பிட முடியாது.இந்த அநீதிக்கு எதிராக, கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மிகவும் வலுவான எதிர்ப்பு உருவாகவேண்டும்.சித்திரவதைக்கு தலைமை வகித்து, மத ரீதியான இழிச் சொற்களை பயன்படுத்தியதற்காக காவல் ஆய்வாளர் சுதீஷ் குமார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதற்கான துணிச்சல் நமது ஜனநாயக அமைப்புகளுக்கு ஏற்படவேண்டும்.

Comments are closed.