தடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

0

ஜம்மு கஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. அதை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

ஜம்மு கஷ்மீர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களில் மியான் அப்துல் கயூமும் ஒருவர். இவர் ஜம்மு கஷ்மீர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆவார்.

தன்னை தடுப்புக் காவலில் வைத்துள்ளதற்கு எதிராக அவர் ஜம்மு கஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அநத மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த மாதம் 28ஆம் தேதி அவரை விடுதலை செய்ய மறுத்திருந்தது. மேலும் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மியான் அப்துல் கயூம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து அவரது மேல் முறையீடு மனு மீதான விசாரனை நேற்று நடைபெற்றது. அதில், மியான் அப்துல் கயூம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக விளக்கமளிக்குமாறு ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அவர்கள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கயூமுக்கு தேவையான உதவிகள் செய்துதரப்பட வேண்டும்.

மியான் அப்துல் கயூம் தாக்கல் செய்த மனுவில், ‘40 ஆண்டுகளுக்கு மேலாக வழக்குரைஞராக பணியாற்றி வந்தவரை ஜம்மு கஷ்மீருக்கு வெளியே உள்ள சிறையில் தடுப்புக் காவலில் வைத்துள்ளது சட்டவிரோதமானது. ஜம்மு கஷ்மீர் உயர் நீதிமன்றம் சில முக்கிய விவரங்களை கருத்தில் கொள்ளாமல் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே, மனுதாரரின் தடுப்புக் காவலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும், அவரின் உடல்நலனை கருத்தில் கொண்டு டெல்லியிலிருந்து ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறைக்கு கொண்டு செல்ல நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Comments are closed.