குஜராத்தில் விதிகளை மீறிய பாஜக அமைச்சர் மகன்: தட்டிக்கேட்ட பெண் காவலர் கட்டாய ராஜினாமா!

0

அரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் நள்ளிரவு நேரத்தில் காரில் சுற்றித்திறிந்த பாஜக அமைச்சர் மகனையும் அவரது நண்பர்களையும் தட்டிக்கேட்ட பெண் காவலர் ராஜினாமா செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத், சூரத் நகரில் காவலராக பணியாற்றுபவர், சுனிதா யாதவ். இவர் கடந்த புதன்கிழமை இரவு சூரத் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தார். ஊரடங்கு உத்தரவையும் மீறி ஐந்து பேர் கொண்ட கும்பல் மாஸ்க் அணியாமல் ஒரே காரில் வலம் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி சுனிதா விசாரணை நடத்தியுள்ளார். ஆனால், அவர்கள், “நாங்கள் யார் தெரியுமா?” என்று, உடனே போன் செய்து குஜராத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் குமார் கானானியின் மகன் பிரகாஷ் கானானிக்கு தகவல் கொடுத்தனர்.

அடுத்த அரை மணி நேரத்தில் அமைச்சரின் காரில் வந்து இறங்கிய பிரகாஷ் தன் நண்பர்களை விடுவிக்கும்படி சொல்லியுள்ளார். ஆனால், காவலர் சுனிதா யாதவ் அவர்களை விடுவிக்க மறுத்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சுனிதா யாதவ், “கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன். இரவு 12 மணி வரை காவலுக்கு நிற்கும் நாங்கள் என்ன முட்டாளா? என்று கேட்டுள்ளார். பதிலுக்கு அமைச்சரின் மகனோ, “உன்னை 365 நாள்களும் இதே இடத்தில் நிற்க வைப்பேன்” என்று மிரட்டினார். இதற்கு சுனிதா, “நான் உன் வீட்டு பணியாளோ அல்லது அடிமையோ இல்லை” என்று பதில் அளித்தார்.

பிறகு சுனிதா காவல் நிலையத்திற்கு தகவலை தெரிவித்தார். ஆனால் இன்ஸ்பெக்டர், அவர்களை அங்கேயே விட்டுவிட்டுக் காவல் நிலையத்திற்கு விரைந்து வரவேண்டும் என்று சுனிதாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது, அமைச்சரின் மகனுக்கும் சுனிதா யாதவுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை சிலர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட வைரலானது. வீடியோ வெளியானதையடுத்து அமைச்சரின் மகனுக்குப் பலரும் கண்டனத்தைத் தெரிவித்து, காவலரைப் பாராட்டி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, சுனிதா தலைமை காவல் நிலையத்திற்கு உடனே இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது சுனிதா யாதவ் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டதாகவும், சுனிதாவிடம் வற்புறுத்தி கட்டாயமாக ராஜினாமா கடிதம் வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.