ஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்

0

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கை மோடி அறிவித்தார். கொரோனாவுக்கு முன்னும், கொரோனாவுக்கு பின்னும் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார திட்டங்களையும் அறிவித்தார்.

பொருளாதார மீட்பு திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தினந்தோறும் அறிவித்து வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“கொரோனா ஊரடங்கால் ஏழை மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை மக்களுக்கான நிவாரணத்தை அதிகரிக்க வேண்டும். மக்களுக்கு வழங்கும் நிதியை நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். மக்களுக்கு தற்போது பணம்தான் தேவை.

விவசாயிகள் நேரடியாக பணம் பெறும் வகையில் செய்ய வேண்டும். இவர்கள் நமது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியவர்கள். விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் நாம் உதவி செய்யாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் எழுவது கடினம்.

சமீபத்தில் நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும் அவலத்தை பார்க்கும் போது எனது இதயம் வலிக்கிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் தொழிலாளர்கள் பலர் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். இவர்களுக்கு நிவாரணம் போதாது.” என ராகுல் காந்தி தெரிவித்தார்.

Comments are closed.